புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற முன் வரவேண்டும்- விக்னேஸ்வரன் வேண்டுகோள்

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களிற்குரிய பொறியியலாளர்கள் பற்றாக் குறையாகவுள்ளதனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற உடன் முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.

உலக வங்கியின் நிதியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்ட பணிகளிற்கான நிதி கிடைத்துள்ளதனையடுத்து அது தொடர்பில் நேற்றைய தினம் உலக வங்கியின் பிரதிநிதிகளிற்கும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான குழுவினருக்கும் இடையில் முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்துப்புத் தொடர்பில் தெரிவிக்கும்போதே மேற்படி கோரிக்கையினையும் விடுத்தார்.

இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களிற்குரிய பொறியியலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளமையே அத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உள்ள ஒரே தடையென உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனால் இவ்வாறு தடையாகவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொறியியலாளர்கள் எமது பிரதேசத்தில் குறிப்பிட்டளவில் மட்டுமே உள்ளனர். அவர்களை இப்பணிக்கு விடுவித்தால் அவர்கள் தற்போது ஆற்றும் பணிகள் பாதிக்கப்படும். அல்லது பகுதியளவில் பணியாற்றினாலும் குறித்த திட்டத்தினை முழுமை செய்ய முடியாத நிலமையே கானப்படும்.

எனவே புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகளில் பலர் இதே பொறியியலாளர்களாக வெளிநாடுகளில் பணி புரிகின்றனர். எனவே அவர்கள் இங்கு வந்து எமது உறவுகளிற்காக பணியாற்ற உடன் முன் வரவேண்டும்.

உறவுகள் கருசணை கொண்ட புலம்பெயர்ந்தவர்களிற்கான ஓர் வாய்ப்பு இதில் அதிக வருமானத்தினை எதிர்பார்க்காது கிடைக்கும் வருமானத்துடன் தாயக உறவுகளிற்கான ஓர் பணியாக கொண்டு தேவையாற்ற முன் வரவேண்டும்.

இதேவேளை இவ்வாறு வரும் உறவுகள் வெளிநாட்டுப் பிரஜா உரிமைதான் உண்டு இலங்கை குடி உரிமை இல்லை என்ற அச்சமும் தேவையில்லை அரச நிதி அல்லாத திட்டத்திற்கான அனுமதியை திட்ட காலத்திற்கு இலகுவில் பெற முடியும். அதற்கான வாய்ப்பினையும் எம்மால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். என்றார்.