வடமாகாண வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளின் முகாமைத்துவப் பணிகளில் சேவையாற்றுவதற்கு வடக்கு மாகாண பட்டதாரிகள் முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சருக்கும் இடையே நேற்று மாலை விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் முதலமைச்சரிடம் பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழு விபரத்தையும் துறைசார்ந்த ரீதியில் தொகுத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கையளிக்க வேண்டும்.

அந்த விவரங்கள் அனைத்தும் வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் .

ஆடைத்தொழிற்சாலைகளில் காணப்படும் முகாமைத்துவப் பணிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் போன்ற வேலைவாய்ப்புக்களுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க முன் வரவேண்டும்.

அத்துடன், தொண்டர் ஆசிரியர் நியமனங்களில் உள்ள முறைக்கேடுகள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்படும்.

மாகாண சபையின் கீழ் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்பவும், கொழும்பு அரசின் கீழ் உள்ள வெற்றிடங்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு வடக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்கப் பரிந்துரை செய்யப்படும்.

அந்த வகையில், போராட்டத்தில் ஈடுபடும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் முகமாக அவர்களின் முழுவிபரத்தையும் துறைசார்ந்த ரீதியில் தொகுத்து வழங்க வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.