கள்ளிக்குளத்தில் யானை தாக்கிய வீடுகளை பார்வையிட்டார் வடக்கு சுகாதார அமைச்சர்

வவுனியா கள்ளிக்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் தாக்கி சேதமடைந்த வீடுகளை வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

நேற்று அதிகாலை கள்ளிக்குளம் கிராமத்தற்குள் நுழைந்த காட்டுயானைகள் அங்கு மீள்குடியேறியுள்ள மக்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த பயிர்களையும் சேதமாக்கியுள்ளது.

இதனால் மீள்குடியேறி மக்கள் வசித்து வந்த ஆறு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், தெய்வாதீனமாக யாருக்கும் காயங்களோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.
இந்த நிலையில் நேரடியாக களத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அங்குள்ள மக்களை சந்தித்து உரையாடியதுடன், வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களை தெரிவித்ததுடன், அவர்களுக்கான நிவாரணங்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள், தற்காலிக வீடுகள் அமைத்து மீள்குடியேறிவரும் நிலையில் இவ்வாறான அனர்த்தங்கள் மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.