வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே – சீ.வி.விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் தமிழ் மக்களே என வட மாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இது பற்றி தெரிவித்துள்ளார்.

சிங்களாதீப ஜாதிக பெரமுன என்ற அரசியல் கட்சியின் தலைவராக செயற்பட்டு வரும் டொக்டர் சூரியா குணசேகரவினால் ஊடகம் ஒன்றின் ஊடாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மத வரலாறு ஆரம்பிக்கப்பட முன்னதாகவே இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர் எனவும் அதற்கான வரலாற்று சான்றுகள் பல இருக்கின்றன. இந்திய துணைக் கண்டனத்தின் தென்பகுதியுடன் இலங்கை இணைந்திருந்தது எனவும், 7000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இலங்கை தனியாக பிளவடைந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.யூ. தெரனியகல என்ற தொல்பொருள் ஆய்வாளர் 1992ம் ஆண்டு செய்த ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தென் இந்திய சனத்தொகையே மூதாதையர்களே வடக்கு கிழக்கிலும் வாழ்ந்துள்ளனர்.

கற்காலத்தில் வடக்கு கிழக்கில் பயன்படுத்திய ஆயுதங்களும் தென் தமிழகத்தின் திருநெல்வேலியில் பயன்படுத்திய ஆயுதங்களும் ஒரே விதமானவை என்பது யுனேஸ்கோ மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இரும்பு யுகத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே விதமான கலாச்சாரம் பின்பற்றப்பட்டுள்ளமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயிரிழந்த ஒருவரின் இறுதிக் கிரியைகளின் போது அவர் விரும்பிய பொருட்களையும் கல்லறையில் சேர்த்து புதைக்கும் மரபு காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆதாரமாக ((Vide Professor Indrapala – pages 91 to 111 – The Ethnic Identity – The Tamils in Sri Lanka, Circa 300 Before Christian Era to Circa 1200 Christian Era – MV Publications –The South Asian Studies Centre, Sydney, 2006) இனைக் குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மன்னார், கந்தரோடை, புத்தளம், வன்னி போன்ற பகுதிகளில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 1980 களில் திராவிட எழுத்துக்கள் கொண்ட தொல்பொருட்கள் அகழப்பட்டதாகவும் அரசாங்கம் தொடர்ந்தும் அகழ்வாராச்சி நடத்த அனுமதியளிக்கவில்லை.

சில மிகவும் முக்கியமான வரலாற்று சான்றுகள் மற்றும் ஆவணங்கள் அண்மைக் காலங்களில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2000ம் ஆண்டுகளுக்கு முன்னதாக சங்க காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரே தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது அதற்கான ஆதராங்களும் காணப்படுகின்றன. சிங்கள மொழியானது தமிழ், பாலி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலிருந்து உருவாகியிருக்கலாம். பண்டைய கல்வெட்டுக்களின் மூலம் இந்த விடயங்கள் அம்பலமாகியுள்ளது.

துட்டகமுனு மன்னர் சிங்களவராக இருந்திருக்க வாய்ப்பு கிடையாது, அவர் வாழ்ந்த காலப்பகுதியில் சிங்கள மொழி தோன்றவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும். பேராசிரியர் இந்திரபால இன அடையாளம் குறித்த தனது நூலில் ஆரியர்கள் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

ஆரிய மற்றும் திராவிட மக்கள் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தனர் என்பதனை நிரூபிக்க போதியளவு தொல்பொருள் சான்றுகள் இதுவரையில் கிடைக்கவில்லை. மஹாவம்சம் பௌத்த மதத்தை பிரச்சாரம் செய்யும் நோக்கில் எழுதப்பட்ட நூலே தவிர, இலங்கையின் வரலாற்றைக் குறிப்பிடும் நூலாக கருதப்பட முடியாது.

ஆகழ்வாராய்ச்சித் துறையில் இலங்கையின் முதனிலை ஆய்வாளர்களான பேராசிரியர் லெஸ்லி குணவர்தன, பீ.தெரனியகல, சிரான் தெரனியகல, சுதர்சன் செனவிரட்ன போன்றவர்களும் இலங்கையில் பூர்வகுடிகள் இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டையேக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் தமிழர்கள், பௌத்த மத வரலாற்றுக் காலத்திற்கு முன்னதாகவே வாழ்ந்தார்கள் என்பதே எனது வாதமாகும் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மைய ஆய்வுகளின் ஊடாகவும் இந்த விடயங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் சில வரலாற்று ஆய்வு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை புத்திஜீவிகள் சிங்கள வரலாறு பற்றிய விபரங்களை வெளியிடுகையில் வரலாற்று சான்றுகள் ஆதாரங்களின் அடி;பபடையில் வெளியிடவில்லை என்பது துரதிஸ்டவசமானது.