வன்னியில் கால்நடைகளை கடத்தும் மாபியா கும்பல் – சி.சிவமோகன்

வவுனியாவில் சமூக விரோதமாக சட்டதிட்டங்களுக்கும், சுகாதார நடைமுறைகளுக்கும் உட்படாத வகையில் கொழும்புக்கு மாடுகள் வெட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். வன்னி பிரதேசத்தின் முல்லைத்தீவு நிறைவான கால்நடைகளைக் கொண்ட ஒரு பிரதேசமாக காணப்பட்டது.

யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்தமையால் பெருந்தொகையான கால்நடைகள் ஏதிலிகளாக விடப்பட்டன. தற்சமயம் இலட்சக்கணக்கான மாடுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத வகையில் அழிக்கப்பட்டு விட்டது.

கால்நடைகள் அழிவதை நாம் ஒரு சட்டவரையறைக்குள் கொண்டு வரவில்லையெனில் எமது வன்னிப் பிரதேசத்தின் கால்நடை வளம் முற்று முழுதாக அழிந்து விடும்.

இன்று வன்னி மாவட்டங்களில் முக்கிய வருமான வளமாக இருப்பது கால்நடைவளம். இந்த கால்நடைவளம் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நாம் பல நடவடிக்கைகளை எடுத்த போதும் அதனை தடுக்க முடியாமல் அவை தோல்வி அடைந்துள்ளது. உயர் அதிகார பலங்கள் மக்களின் பலத்தை சூறையாடிவிட்டது.

இனியும் அவ்வாறு சூறையாட அனுமதிக்க முடியாது. வன்னிப் பிரதேசத்தில் பெரியதொரு மாபியா கும்பல் ஊடுருவி இங்குள்ள கால்நடை வளங்களை வகைதொகையின்றி அழிப்பதுடன் கடத்தியும் வருகின்றது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரே இரவில் இரண்டு காளை மாடுகளும் மூன்று பசு மாடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக முல்லைத்தீவு, வவுனியா என பல பகுதிகளிலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவருடத்திற்கு முதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவில் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கால்நடை தொடர்பில் யாழ். மாவட்டத்தில் இறுக்கமான நடைமுறை பின்பற்றப்படுகின்றது. ஒரு ஆட்டைக் கூட வெளிப்பிரதேசத்திற்கு கொண்டு செல்ல முடியாது.

ஆனால் அத்தகைய நடைமுறைகள் வன்னிப் பிரதேசத்தில் ஏன் பின்பற்றப்படவில்லை என வடமாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களிடம் கேட்கின்றேன்.

இந்த விடயத்தில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இருப்பினும் வன்னிப் பிரதேசத்தில் உள்ள கால்நடை வளங்களை மாபியா கும்பல் அழிப்பதை ஏற்க முடியாது.

கால்நடைகள் தொடர்பில் அண்மையில் வவுனியாவில் ஒரு பிரச்சனை இடம்பெற்றது.

அண்மையில் வவுனியா கொல்களத்தில் வெட்டப்பட்ட மாடுகள் வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தது. அதில் முறையான நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை.

வவுனியா கொள்கலத்தில் கூட சரியான முறைகள் பின்பற்றப்படவில்லை. களவு போகும் மாடுகள் பல வவுனியா மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு ஒரே இரவில் பல மாடுகள் வெட்டப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுகிறது.

எந்தவித சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படாதும், எந்தவித அனுமதிகளும் பெறப்படாது அவை கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் ஒரு புறநடையான அனுமதியை வைத்துக் கொண்டு இவை நடைபெற்று வருகின்றது.

வடமாகாண முதலமைச்சர் இது தொடர்பில் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து அந்தந்த பிரதேசத்திற்குரிய கொள்கலன்களில் அப்பிரதேசத்திற்கு தேவையான மாடுகளே வெட்டப்பட வேண்டும்.

இங்குள்ள மாடுகளை வெட்டிக் கொண்டு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வதென்பதை ஏற்கமுடியாது. ஏனெனில் களவு எடுக்கப்பட்ட மாடுகளே அதிகமாக கொண்டு செல்லப்படுகின்றன. அவை கொண்டு செல்லப்படும் முறைகள் கூட பொதுமக்களின் பாவனைக்கு உதவாத முறையில் கொண்டு செல்லப்படுகிறது.

இது ஒரு சமூக விரோத செயல். இது தொடர்பில் சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் மாகாண சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு உடந்தையாக செயற்பட்ட உத்தியோகத்தர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனக்கு இங்கு யார் மீதும் பகையில்லை. ஆனால் எங்களது வளங்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. அது தொடர்பில் மக்கள் பிரநிதி என்ற வகையில் நான் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இவ்வாறு அனுப்பப்படுகின்ற இறைச்சியை கொழும்பில் பயன்படுத்துபவரது நிலையைக் கூட நாம் சிந்திக்க வேண்டும்.

சுகாதார சீர்கேடாகவே அது செல்கிறது. இதுவெல்லாம் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியள்ளது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் வவுனியா மாடு வெட்டும் கொல்களம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டு அவை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.