அரசாங்கம் தூங்கவில்லை… தூங்குவதைப்போல் நடிக்கிறது!

இலங்கை அரசாங்கமே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கும், படையினரின் நில ஆக்கிரமிப்புக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அந்த அரசாங்கத்திடமே எங்கள் நிலங்களை படையினரிடமிருந்தும், சிங்கள குடியேற்றங்களிலிருந்தும் மீட்டு தாருங்கள் என நாங்கள் கேட்கிறோம்.

நாங்கள் கேட்பதனால் எந்த பயனும் இல்லை. தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குபவன்போல் நடிப்பவனை எழுப்ப இயலாது என சொல்வார்கள். அவ்வாறே அரசாங்கம் தூங்கவில்லை. தூங்குவதைபோல் நடிக்கிறது.

இது சாதாரண விடயமல்ல. மிக பாரதூரமான விடயம். எனவே தமிழ் மக்கள் நாங்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

வடமாகாணத்தில் கேப்பாபிலவு மக்கள் தங்கள் நிலங்களை படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்டு கொடுக்குமாறுகோரி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திவரும் நிலையில், மேற்படி போராட்டம் தொடர்பாக முதலமைச்சரிடம் நேற்று ஊடகங்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முதலமைச்சர் மேலும் பதிலளிக்கையில்,

கேப்பாப்பிலவு மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் பூரணமாக அறிந்திருக்கின்றோம். இந்நிலையில் அந்த மக்களுடைய மீள் குடியேற்றம் தொடர்பாக எம்மால் எடுக்க கூடிய சகல நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக எடுத்தும் வருகின்றோம்.

இந்த இடத்தில் ஒன்றை கூறவேண்டும். அதாவது தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் தூங்குபவனைபோல் நடிப்பவனை எழுப்பவே இயலாது என சொல்வார்கள். அப்படியான ஒரு நிலையிலேயே அரசாங்கம் உள்ள து. அதாவது அரசாங்கம் உண்மையில் தூங்கவேயில்லை

ஆனால் தூங்குவதைபோல் நடிக்கிறது. இது பாரதூரமான விடயம். தமிழ் மக்களுடைய நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்கும், படையினரின் நில ஆக்கிரமிப்புக்களுக்கும் இலங்கை அரசாங்கமே ஒத்துழைப்பு வழங்குகிறது.

நிலை இவ்வாறிருக்க நாங்கள் அதே அர சாங்கத்திடம் சென்று எங்களுடைய நிலத்தை மீட்டு தாருங்கள் என கேட்பதனால் எமக்கு எந்தவொரு பயனும் இல்லை.

எனவேதான் நாம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இவ்வாறான ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த இயலும் என்றார்.

மேலும், இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தை பாதுகாத்தே ஆகவேண்டும். என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதியே வழங்க இயலாது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையினையும் கண்டறிய இயலாது என வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை வெளிப்படுத்தக்கோரி வடமாகாணத்தில் அனைத்து இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படுகின்றது.

இந்நிலையில் அரசாங்கம் ஒரு பதிலையும் வழங்கவில்லை. மாறாக அரசாங்கம் மக்களை விசனப்படுத்தும் பேச்சுக்களையே தொடர்கின்ற நிலையில் குறித்த விடயம் தொடர்பாக முதலமைச்சரின் நிலைப்பாடு தொடர்பாக நேற்றய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதல்வர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காடையர்களால் காணாமல் ஆக்கப்படவில்லை.

இந்த நாட்டின் இராணுவத்தில் இருந்த சிலரினால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் அரசாங்கம் இராணுவத்தை விசாரிக்க விடமாட்டோம்.

அவர்களை பாதுகாத்தே தீருவோம். என கங்கணம் கட்டி நிற்றும் நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்க இயலாது. அதேபோல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையினையும் கண்டறிய இயலாது.

இந்நிலையில் சர்வதேச மட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக நாம் விழிப்புணர்வை உண்டாக்கி வருகின்றோம்.

இதனால் பல இராணுவ அதிகாரிகள் மீது சந்தேகங்கள் எழுந்துள்ளது அவர்களில் சிலரை தமது நாடுகளுக்கு வர விடாது சில நாடுகள் தடுக்கின்றன.

இவ்வாறான நிலையிருக்கின்றது. மறுபக்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்படும் போராட்டங்களை விட்டு பிடிக்கலாம்.

மக்கள் இப்படியே இருந்தால் களைத்துப் போய் நின்று விடுவார்கள் என அரசாங்கம் நினைக்கிறது. அது தவறு என நாம் காட்டவேண் டும். எமது குரல் தொடர்ந்தும் கேட்டு கொண்டே இருக்கவேண்டும் என்றார்.