dsd

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே சர்வதேச நிகழ்ச்சி நிரலில் முதன்மையானது : சுமந்திரன் எம்.பி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமே சர்வதேச நிகழ்ச்சி நிரலிலும் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலிலும் முதன்மையானது என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 38வது நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்றைய போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சி.சிறீதரன் ஆகியோர் கலந்து ஆதரவு தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், உங்களுடைய மனக்குமுறல்களை நாங்கள் சரிவர புரிந்து வைத்திருக்கிறோம். உங்களுடைய ஆவல்களும் எங்களுடைய விருப்பங்களும் வேறானவை அல்ல.

நாங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் கடுமையான அழுத்தங்களை ஜெனீவாவரை நிரூபிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

விரைவில் காணாமல் போனோர் செயலகம் தொடர்பான சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்தச்செயலணியிலே ஐ.நா பிரதிநிதிகளின் தொழில்நுட்ப உதவி ஐ.சி.ஆர்.சி அமைப்பின் தொழில்நுட்ப உதவி உள்ளடக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு காணாமல் போனோர் தொடர்பிலும் விசாரணைகள் இடம் பெறவேண்டும். அதன்போது நீதி கண்டறியப்பட்டு பின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அரசாங்கம் மற்றும் அரச தலைவர்கள் ஜெனீவாவில் இணை அனுசரணை பெற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்.

ஜி.எஸ்.பி போன்ற பொருளாதார ரீதியான அழுத்தங்களையும் வழங்கவேண்டும் என சர்வதேசப் பொருண்மிய சமூகத்தைக் கேட்டிருக்கின்றோம்.

அரசு தலைவர்கள் தென்னிலங்கையில் பேசுகின்ற விடயங்கள் உங்களை விசனப்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும். அவை அவர்களுடைய அரசியல் நிலைபேற்றுக்கான கருத்துக்களாக இருக்கும்.

ஆனால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்காமல் இருக்கமுடியாது. இழுத்தடிப்புக்கள் உள்ளது. எனவே நாங்கள் சர்வதேச ஒத்திசைவு மூலம் காரியங்களை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
கால அவகாசம் வழங்காது சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்க முடியும் என்று உங்களிடம் பொய் கூற மாட்டேன்.

அணுவாயுதத்தை வைத்து தாக்குகின்ற வடகொரியாவைக்கூட சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்ல பல நியமங்களை சொல்கிறார்கள்.

சர்வதேச அமைப்புகள் ஒருபோதும் இலங்கை அரசுக்கு கட்டளைகளை இடாது. அழுத்தங்களைத்தான் வழங்கும். அதனை காணாமல் போனோர் விடயத்தில் சாதகமாக சாதுரியமாக நாங்கள் பாவிப்போம்.

உங்கள் உணர்வுகளோடு எப்போதும் இருப்போம். அதற்காக முழுமையாக உழைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.