அரசியலமைப்பு வழிக்காட்டல் குழுவின் அறிக்கை அடுத்த மாதம் நாடாளுமன்றில் – சுமந்திரன் தகவல்

அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழிக்காட்டல் குழு தயாரித்த அறிக்கையை ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் நடைபெற்ற உத்தேச அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் தொடர்பான கட்சித் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளை தவிர ஏனைய அனைத்து கட்சிகளின் தலைவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அரசியல் தீர்வை கொண்டு வருதல், அதிகார பரவலாக்கம், நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தல், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல் உட்பட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வழிக்காட்டல் குழு எதிர்வரும் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் கூட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.