ஜெனிவா தீர்மானத்தை கூட்டமைப்பு ஆதரித்தது ஏன்? – வடக்கில் விளக்கக் கூட்டங்களை நடத்துகிறார் சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு அளித்தது தொடர்பில், மக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டங்களை கூட்டமைப்பு நடத்தி வருகிறது. நேற்று முல்லைத்தீவில் இரண்டு இடங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இந்த கூட்டங்களில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ.சுமந்திரன் கலந்து கொண்டிருந்தார். மேற்படி கூட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார்கட்டு பகுதியிலும் ஒட்டுசுட்டான் பகுதியிலும் இடம்பெற்றன.

அதேவேளை, ஐ.நா தீர்மானங்களை துரிதமாக அமுல்படுத்து வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களிடம் இருந்த போதிலும் சர்வதேச முறைகள் அவ்வாறு செயற்படுவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி கிழக்கிலுள்ள முள்ளியான் வைத்தியசாலைக்கான விடுதியை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்காமல் தட்டிக்கழிக்கலாமா என்ற சிந்தனை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் சிறிய எண்ணிக்கையில் உள்ள தமிழர்கள், இறைமையுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கத்தை எதிர்த்து நாம் கேட்கின்ற வகையில் நடக்க வேண்டும் என சர்வதேசத்தை கோருவது முட்டாள்தனமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, தமிழர்களை கைவிட்டு விட்டதாக கூறுவோர், புத்தி சுவாதீனம் அற்றவர்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு மீது சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்படுவது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டார்.