நாம் ஆயுத பலத்தைத்தான் இழந்தோம், மக்கள் பலத்தை அல்ல! : மாவை சேனாதிராஜா

நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை கேட்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இல்லை நாங்கள் விடுதலைக்காகத்தான் போராடினோம். என இராணுவத்தளபதிகள் முன்னிலையில் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவில் இன்று அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,மக்களுடைய மீள்குடியேற்றம் முக்கியமானது. அதன் அடிப்படையில் நீங்கள் குறிப்பிட்டது போல இந்த கேப்பாப்புலவுக்கு மக்கள் திரும்பவேண்டும்.

அது மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் அந்த மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.மேலும் பிலக்குடியிருப்பு – புதுகுடியிருப்பு போராட்டங்களில் ஈடுபட்ட மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சம்மந்தன் ஜனாதிபதியுடன் கடுமையாக பேசுவதற்கு அந்த மக்களின் போராட்டபலம் அமைந்ததைப் போல தற்பொழுது கேப்பாப்புலவு மக்களாகிய உங்களின் போராட்ட பலமும் இருக்கின்றது.

எனவே நாங்கள் ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம், விரைவில் உங்கள் சொந்த நிலங்களுக்கு செல்ல நாங்கள் வழிவகுப்போம்.மேலும் இந்த அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கும்படி நாங்கள் கூறவில்லை. சர்வதேச நாடுகளின் ஆலோசைனைக்கு நாங்கள் தலையசைத்தோம்.

நாங்கள் இழந்துள்ளது ஆயுத பலத்தைதான் தவிர மக்கள் பலத்தை அல்ல! எமது மக்கள் பலத்துடன் ஜனநாயகவழிப் போராட்டங்களை நாங்கள் தொடர்வோம்.அதற்கு ஆதரவு தெரிவிக்க சர்வதேசத்திடம் கோருவதற்கு நாங்கள் உரித்துடையவராக இருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.