முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகள் இன்னும் பரந்து காணப்படுகின்றது : சிறிதரன் எம்.பி

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தேவைகள் இன்னும் பரந்து காணப்படுகின்றது. அதனை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் தொடர்ந்து முயற்சி எடுப்போம் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழை அமைப்பின் அலுவலகத்தை நேற்று திறந்து வைத்த பின் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,

அன்னை தெரேசா வீதி வீதியாக திரிந்து எல்லோரிடமும் கையேந்தினார் மானிட வாழ்விற்காக. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் மானிட விடுதலைக்காக.
இவ்வாறு ஒவ்வொரு இறை தத்துவங்கள் கூட மானிட வாழ்வு, மனித விடுதலை, அவர்களுரிய காரியங்களுக்காக பல்வேறுபட்ட வரலாறுகளை கூறுகின்றது.

அதுபோல இந்த தமிழ் தேசத்தினுடைய சுமைகளை, தேச வரலாறுகளை தங்களுடைய உடல்களிலே சமந்து கொண்ட உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட இந்த சகோதரர்கள் தங்களுடைய வாழ்விற்கான சுமைகளையும் தற்போது சுமக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களைப் பார்த்து பரிதாபப்படுகின்றவர்கள் அல்ல. அவர்கள் இந்த மண்ணிலே பல்வேறு சாதனைகளை புரிந்தவர்கள். மண்ணிலே தங்களது அடையாளங்களை பதித்தவர்கள்.

எங்கள் மண்ணிலே எம்மீது திணிக்கப்பட்ட அழுத்தம் அவர்களுடைய சில நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அது உளரீதியான ஒரு பாதிப்பை அல்லது பின்னடைவை தரவில்லை என்பதைத் நாம் பார்க்க வேண்டும்.

பலரது கூட்டு முயற்சியே உயிரிழை அமைப்புக்கு இந்த மண்டபத்தை தந்திருக்கின்றது. வீதிகளும் மண்டபங்களும் எங்கள் மக்களுடைய வாழ்க்கையிலே மாற்றங்களைத் தராது.

ஆனால் இந்த நிகழ்வில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட இவர்களுக்கான இவ்வாறான ஒரு மண்டபம் தேவை என்பது மிக முக்கியமானது.

இந்த மண்டபத்தோடு மட்டுமல்லாமல் இந்த அமைப்பின் கீழ் உள்ள ஒவ்வொரு தனிநபர்களினதும் வருமானங்கள் அதிகரிக்கப்பட

வேண்டும். அவர்களுக்கான தேவைகள் இன்னும் ஏராளமாக நீண்டு கிடக்கிறது.

அவர்கள் கூடிக் கதைப்பதற்கான ஒரு மண்டபம் தான் உள்ளதே தவிர, அவர்கள் வாழ்வாதார ரீதியாக ஆற்றப்பட வேண்டிய விதத்தில் இன்னும் பல காரியங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

அதற்காக நாம் உங்களுடன் சேர்ந்து இருப்போம். மிக முக்கியமாக கனடா பிரன்டன் தமிழ் அமையம் இம் மண்டபத்துடன் நிற்காது உங்களுக்கு தொடர்ந்தும் உதவும் என நம்பிக்கையுடன் தெரிவித்து கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.