32

கேப்பாப்புலவு காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும், கிரிசாந்த டி சில்வா சம்பந்தனிடம் உறுதி!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் அனைத்தும் பொதுமக்களிடம் மீண்டும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உறுதியளித்துள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்புலவில் 468 ஏக்கர் காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அதற்குள்ளேயே இராணுவத் தலைமையகமும் அமைந்துள்ளது. அவற்றை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இதனையடுத்து, 3 நாட்களின் பின்னர் கடந்த வியாழக்கிழமை இரவு தொலைபேசியூடாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுடன் தொடர்புகொண்டு பேச்சு நடாத்தியுள்ளார். இதன்போது கேப்பாப்புலவுக் காணி விடுவிப்புத் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் வினவப்பட்டது.

அதற்கு இராணுவத் தளபதி, அந்தக் காணிகளை நிச்சயம் விடுவிப்போம் என்று பதிலளித்துள்ளார். அங்கு அமைந்துள்ள இராணுவ முகாமை இடமாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அது முடிவடைந்ததுமே அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.