நாயாறு விடயத்தில் காவல்துறையினர் பக்கச்சார்பாகச் செயற்படுகின்றனர் – சாந்தி சிறிஸ்கந்தராஜா!

முல்லைத்தீவு மாவட்டம் நாயாறுப் பகுதியில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் அமைத்த கொட்டகையினை அகற்றுமாறு பொலிசார் அச்சுறுத்துகின்றமை கண்டிக்கத்தக்க விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறுப் பகுதியில் உள்ள சங்கத்தில் பதிவுள்ள திணைக்கள அனுமதி பெற்ற உள்ளூர் மீனவர்கள் தமது படகுதுறைப் பகுதியில் வலையை பாதுகாக்கும் நோக்கில் வெறும் 20 அடி கொட்டகையே அமைத்தனர். அவ்வாறு அமைத்த கொட்டகையினை உடனடியாக அகற்றுமாறு பொலிசார் அங்கு சென்று அச்சுறுத்துகின்றமை கண்டிக்கத்தக்கது.

அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே வசிக்காது மாவட்ட திணைக்களத்திற்கோ அல்லது உள்ளூர் சங்கங்களிற்கோ தெரியாது. தென்னிலங்கையைச் சேர்ந்த தனி ஒரு மனிதன் 67 படகுகளை வைத்து தொழில் புரிகின்றார். அவ்வாறு சட்டவிரோதமான தொழிலைச் செய்யும் ஒருவரை பாதுகாக்கும் நோக்கிலேயே பொலிசார் வேண்டுமென்றே இவ்வாறு செயல்படுகின்றனர்.

இவ்வாறு சட்டத்தை மதிக்காது ஒரு பக்கச் சார்பாக செயல்படும் பொலிசாரின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. உண்மையில் கடற்கரையில் வாடி அமைக்கப்பட்டிருந்தால் அது அரச நிலமானால் பிரதேச செயலாளரும் தனியாருக்குச் சொந்தமானது எனில் உரிமையாளரே சட்டத்தினை நாடி இருக்க வேண்டும். ஆனால் இங்கே இரு நடவடிக்கைகளும் இன்றி பொலிசார் நேரடித் தலையீடு செய்தமையின் மூலம் உண்மை வெளித்தெரிகின்றது. அதாவது குறித்த ஒரு பெரும்பான்மை இனத்தவருக்காக பக்கச் சார்பாக செயல்பட்டுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் உடனடியாக உரிய இடங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பொலிசார் சட்டத்தினை அனைவருக்கும் சமனாக பார்க்க வேண்டுமே அன்றி 67 படகின் உரிமையாளரான பண வசதி படைத்தவருக்காக அன்றாடம் ஒரு படகில் தொழில் புரியும் பாமரத் தொழிலாளியை வஞ்சிப்பதனை அனுமதிக்க முடியாது. எனவே இவ் விடயம் தொடர்பில் பல முறை இங்குள்ள பொலிசார் இவ்வாறே செயல்பட்டமையினால் இது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராயப்படுகின்றது என்றார்.