அரசில் தமிழரின் உரிமைகளை ஏற்போருடன் கூட்டுச் சேர்வோம்!

காலத்திற்கு ஏற்றவாறு எமது சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். அதனால், அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வோருடன் கூட்டுச் சேரவேண்டும் என்று நினைக்கின்றேன். அதன் ஊடாக உங்கள் பொருளாதார வலிமையை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதைச் செய்வதாயின் நாங்கள் தனிப்பட்ட விதத்தில் அரசிடமிருந்து நன்மைகளை எமக்கென்று பெறக்கூடாது. அவ்வாறான பொறியில் நாம் அகப்பட்டுக் கொண்டால் எமது கோரிக் கைகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.” இவ்வாறு கூறியிருக்கின்றார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

வடமாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தினால் நிறுவப்பட்ட உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் மாலை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை வீதி, மண் கும்பானில் நடைபெற்றபோது அதில் முதலமைச்சர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“எமது இளைஞர், யுவதிகள் அரச உத்தியோகந்தான் கதி என்று இல்லாமல் எமக்குக் கிடைக்கக் கூடிய வளங்களைக் கொண்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த உற்பத்தியாளர்களாகவும் வருமானத்தை அதிகம் பெறுபவர்களாகவும் மாறலாம்.

அண்மையில் தொழிற்துறை அமைச்சர் மலிக் சமரவிக் ரம இங்குவந்திருந்தார். இரண் டாயிரம் தொழில் முயற்சியாளர்களை நாடு முழுமையாக உருவாக்கவேண்டும் என்றும் அவர்களுள் இருநூறு பேரை வடமாகாணத்தில் உருவாக்க முயற்சிகள் எடுத்து வருகின்றார் எனவும் கூறினார்.

அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஏற்றுமதி அபிவிருத்திசபையின் தலைவி திருமதி.இந்திரா மல்வத்த ஏற்றுமதியாளர்களுக்குத் தம்மால் இயலுமான எல்லா உதவிகளையும் செய்வார் என உறுதிமொழி அளித்தார்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் மத்திய அரச அமைச்சர்களுடனும் அபிவிருத்தி சபைகளுடனும் கைகோத்து, நன்மைகள் பெற்று, எமது உற்பத்திகளைப் பெருக்கிக்கொள்வதும், ஏற்றுமதிகளை விருத்தியடைய உழைப்பதும் தவறல்ல என்று நான் கருதுகின்றேன்.

எம்முள் பலர் வெறுப்பின் அடிப்படையிலேயே அரசியலிலும் ஈடுபடுகின்றார்கள். மற்றைய துறைகளிலும் செயற்படுகின்றார்கள். சதா குற்றம் கூறிக் கொண்டிருக்கவே விரும்புகின்றார்கள்.

எந்த முன்னேற்றத்திலும் ஈடுபடாமல் இருப்பதே தோதான அரசியல் என்று நினைக்கின்றார்கள். இது தவறு. எமக்கு அரசியல் ரீதியாகத் தவறு இழைக்கப்பட்டுள்ளது உண்மையே. ஆனால், அதற்காக நாம் எம் மனதில்வெறுப்பையும் துவேசஷத்தையும் வளரவிடுவது பிழையென்றே எனக்குப்படுகின்றது. அது வன்முறைக்கே வித்திடும்.

வன்முறையால் ஏற்பட்ட அவதிகளையும் அனர்த்தங்களையும் அல்லல்களையும் அனுபவித்தவர்கள் எம்மக்கள். மீண்டும் பொறாமை, துவேசம், வெறுப்புணர்ச்சி போன்றவற்றின் பாதையில் பயணிப்பது எமக்கு அழிவையே ஏற்படுத்தும். எமது சிந்தனைகள் மாற வேண்டும்.

நாம் எடுத்துக்கொண்ட செயலின் தன்மையையும், எங்கள் வலிமையையும், மாற்றான் வலிமையையும் எம் இருவருக்கும் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்து செயற்படவேண்டும் என்றார் வள்ளுவர்.

அண்மைய ஜெனிவா நாடகத்தில் எம் வலிமையும், மாற்றானின் வலிமையும் எமக்குத் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் தெரிந்துகொண்டோம்.
காலத்துக்கு ஏற்றவாறு எமது சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். வெறும் ஆத்திரமும் ஆசூயையும் ஆண்மையென்று எம்முள் பலர் நினைக்கின்றார்கள். அது தவறு. எமது துணை வலிமையை மேம்படுத்தவேண்டும்.

அதனால்தான் அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மன முவந்து ஏற்றுக்கொள்வோருடன் கூட்டுச் சேரவேண்டும் என்று நினைக்கின்றேன். அதன் ஊடாக எங்கள் பொருளாதார வலிமையையும் மேம்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். இதைச் செய்வதாக இருந்தால் நாங்கள் தனிப்பட்ட விதத்தில் அரசிடம் இருந்து நன்மைகளை எமக் கென்று எதிர்பார்க்கக்கூடாது. அவ்வாறான பொறியில் நாங்கள் அகப்பட்டுக் கொண்டோமானால் எமது கோரிக்கை களுக்கு மதிப்பில்லாமல் போய்விடும்.

வட பகுதியை சிறந்த உற்பத்திக்கான ஒரு மையமாக மாற்றுவோம் என்று நாங்கள் யாவரும் உறுதிபூணுவோம். அதற்கான உதவி நல்குவோரு டன் கூட்டுச் சேர முன்வருவோம். எமது பொருளாதார விருத்தி எமது வலிமையை வலுவாக்கும் என்பதை மறவாது இருப்போம். எமது பொருளாதார விருத்திக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம்.

வடமாகாணத்தின் தொழிற்துறைத் திணைக்களம் எமது புதிய உற்பத்தியாளர்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும்” – என்றார்.