யாழ். குடாநாட்டுக்கு கஞ்சா: பின்னணயில் படையினரா? – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி

“யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு வருகின்றது. அது தொடர்பான புகைப்படங்களும் ஊடகங்களில் வெளிவருகின்றன. ஆனால், இவற்றை யார் கடத்தி வருகின்றார்கள் என்ற தகலும், அவர்கள் தொடர்பான படங்களும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எனவே, இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் படையினர் இருக்கின்றனரா என்று சந்தேகம் எழுகின்றது.”

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பிரதமர நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான சம்பளத்தில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதி என்பது அனைவருக்கும் பொதுவான வகையிலேயே இயங்கவேண்டும். அது வேறு கோணங்களில் செயற்படக்கூடாது. ஆனால், இந்த நாட்டில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ள வழக்குத் தீர்ப்புகளை எடுத்து நோக்கினால் நீதித்துறை என்பது சுயாதீனமாகச் செயற்படுகின்றா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகின்றது.
அதேவேளை, வடக்கில் இன்று ஒன்றரை இலட்சம்வரையான படையினர் இருக்கின்றனர். கடற்பாதுகாப்பும் பலமாகவே இருக்கின்றது. நிலைமை இப்படியிருக்கும்நிலையில்தான் கஞ்சா கடத்தலும் இடம்பெறுகின்றது.

கேரளாவிலிருந்து வந்த கோடி ரூபா பெறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது எனப் படத்துடன் செய்தி வெளியானாலும் அதை யார் கடத்தி வந்தனர் என்பது குறித்த படங்கள் – தகவல்கள் வெளிவருவதில்லை. எனவே, வடக்குக்கு இவற்றை எடுத்து வருவது யார்?

இப்படி போதைப்பொருட்கள் வந்தால் மாணவர்களின் எதிர்காலத்திலும் அச்சுறுத்தலாகிவிடும். போதைப்பொருள் பாவனையைத் தடுக்கும் புனர்வாழ்வு நிலையங்களும் அங்கு இல்லை.
வடக்கில் படையினர் கையூட்டுகளைப் பெறுகின்றனர். எனவே, இவ்வாறான கடத்தல்களின் பின்னணியில் படங்கள் வெளிவராததால் அவர்கள்தான் இருக்கின்றனர் என்ற சந்தேகம் எழுகின்றது. யார் கொண்டு வருகின்றனர் என்ற விடயத்தை நீதித்துறையாலும் கண்டுகொள்ள முடியாதுள்ளது” – என்றார்.