அரசு ஏமாற்ற முற்பட்டால் சர்வதேசம் கைகொடுக்கும்! – நம்பிக்கை இழக்கவில்லை மாவை எம்.பி.

“நல்லாட்சி அரசு மீது நம்பிக்கை வைத்து நாம் செயற்பட்டிருக்கின்றோம். இன்னும் நாம் முழுமையாக நம்பிக்கை இழக்கவில்லை. நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில்  இந்த அரசு எம்மை ஏமாற்றுமாயின்  எங்களது அடுத்தகட்ட முடிவுகளைச் சர்வதேசம் ஆதரிக்கும். நாம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சர்வதேசத்துடன் பேசித்தான் தீர்மானிக்க முடியும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
“சர்வதேச சமூகத்தின் இராஜதந்திரத்திற்கு எதிராகச் செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“போர்க்குற்றங்களுக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்க முடியாது என்று அரசு சொல்வதற்காக அரசைக் கவிழ்த்துவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்காது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.