எமக்கு அரசியல் ரீதியாகத் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பது உண்மையே” – விக்கினேஸ்வரன்

“எமக்கு அரசியல் ரீதியாகத் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பது உண்மையே. அதற்காக நாம் எமது மனதில் வெறுப்பையும் துவேசத்தையும் வளர விடுவது பிழையென்றே எனக்குப் படுகிறது. அது வன்முறைக்கே வித்திடும். வன்முறையால் ஏற்பட்ட அவதிகளையும் இடர்களையும் அல்லல்களையும் அனுபவித்தவர்கள் எமது மக்கள். மீண்டும் பொறாமை, துவேசம், வெறுப்புணர்ச்சி போன்றவற்றின் பாதையில் பயணிப்பது எமக்கு அழிவையே ஏற்படுத்தும். எமது சிந்தனைகள் மாற வேணும். அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வோருடன் கூட்டுச் சேர வேணும் என்று நினைக்கிறேன். அதன் ஊடாக எங்கள் பொருளாதார வலிமையையும் மேம்படுத்த வேணும் என எதிர்பார்க்கிறேன்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் கொழும்பு அரசின் அமைச்சர்களுடனும் அபிவிருத்திச் சபைகளுடனும் கைகோர்த்து, நன்மைகள் பெற்று எமது உற்பத்திகளைப் பெருக்கிக்கொள்வதும் ஏற்றுமதிகளை உழைப்பதும் தவறல்ல என்று நான் கருதுகிறேன். எம்முள் பலர் வெறுப்பின் அடிப்படையிலேயே அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். சதா குற்றம் கூறிக்கொண்டிருக்கவே விரும்புகிறார்கள். எந்த முன்னேற்றத்திலும் ஈடுபடாமல் இருப்பதே தோதான அரசியல் என்று நினைக்கிறார்கள். இது தவறு.

நாம் எடுத்துக்கொண்ட செயலின் தன்மையையும் எங்கள் வலிமையையும் மாற்றான் வலிமையையும் எம் இருவருக்கும் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் சீர்தூக்கிப் பார்த்து, செயற்பட வேணும் என வள்ளுவர் கூறியிருக்கிறார். அண்மைய ஜெனீவா நாடகத்தில் எம்முடைய வலிமையையும் மாற்றானின் வலிமையையும் எமக்குத் துணையாக இருப்பவர்களின் வலிமையையும் தெரிந்து கொண்டோம். காலத்துக்கு ஏற்றவாறு எமது சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படுவது அவசியம். வெறும் ஆத்திரமும் அசூசையும் ஆண்மையென்று எம்முள் பலர் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. எமது துணை வலிமையை மேம்படுத்த வேணும். அதனால்தான் கொழும்பு அரசில் தமிழ் மக்களின் உரிமைகளை மனமுவந்து ஏற்றுக்கொள்வோருடன் கூட்டுச் சேரவேணும் என நினைக்கிறேன். அதன் ஊடாக எங்களின் பொருளாதார வலிமையை மேம்படுத்திக் கொள்ள வேணும் என எதிர்பார்க்கிறேன்“