வருடங்கள் பல கடந்தும் தமிழ் மக்களின் விடிவு கேள்விக்குறியே?

வருடங்கள் பல கடந்தும் தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உறவுகளைத் தொலைத்தவர்களின் போராட்டம், வீடுகள், காணிகளை இழந்தவர்களின் போராட்டங்கள், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் என தமிழ்மக்களின் ஏவிளம்பி புதுவருடம் மலர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு பிறக்கவிருக்கும் ஏவிளிம்பி புத்தாண்டை முன்னிட்டு, ஊடகங்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

பிறக்கவிருக்கும் புத்தாண்டில் மக்களின் துன்ப துயரங்கள் அகலவும் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது உறவுகளுடன் இணைந்து கொள்ளவும் விவசாயிகள், மீனவர்கள், வணிகர்களின் தொழில் முயற்சி மேம்படவும் இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய ஆண்டில் எம்மிடையே உள்ள காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு பாடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சக்கூடிய வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து ஒரே சிந்தனையும் செயற்படுவதற்கு இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும், மன நிறைவையும் வழங்க வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.