மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வான்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பதவி விலகுவது என்பது தனக்கு புதிய விடயமல்ல எனவும் அது பழைய விடயம் ஆகும் எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னரும் மக்களின் உரிமைகளுக்காக பதவி விலகும் சூழல் வந்தபோது முதலில் பதவி விலகியவன் தான் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வான்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வதற்காக பக்குவமாக செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காணிகளை இழந்துள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், அவற்றை உதாசீனம் செய்யக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

தாம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமக்கு உரிய தீர்வை பெற்றுத்தர முடியாவிட்டால் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களும் தங்களின் பதவிகளை துறந்துவிட்டு எம்மோடு வீதியில் இருந்து போராட வரவேண்டும் என கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதற்கே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.