கிளிநொச்சியில் இன்றுடன் 54 நாட்களாகத் தொடர் போராட்டம் – சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.

இலங்கை அரச படைகளான இராணுவத்தினரால் தம் கண்முன்னே கூட்டிச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுளை மீட்டுத் தருமாறு கோரி கிளிநொச்சியில் இன்றுடன் 54 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களது போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் கோரிக்கையையும் அவர்களது நிலை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தப்பட்ட போது காணாமல் போனோரது உறவுகளுடன் உரையாடினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் “முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் தம்முடன் கூட வந்த தமது உறவுகளை இலங்கை அரச படைகளான இராணுவத்தினர் விசாரணை செய்துவிட்டு விடுவதாகக் கூறிக் கூட்டிச் சென்று இன்று வரை விடுவிக்காது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இதே போல அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த தமது உறவுகளை அரசபடைகளால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதியில் தம் கண்முன்னே அரச படைகளிடம் சரணடைந்த தமது உறவுகளான போராளிகளும் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இராணுவத்தினராலும் அப்போது இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களாலும் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எங்குள்ளார்கள் என்று கண்டறிந்து அவர்களை மீட்க விரைந்து உதவுமாறு உருக்கமாகக் கோரிக்கை விடுத்தனர்.

தமது உறவுகளை தம் கண்முன்னே பிடித்துச் சென்ற அரச படைகளான இராணுவத்தினர் அவர்களை இராணுவ முகாம்களில் மிகவும் இரகசியமான முறையில் மறைத்து வைத்துள்ளதாகவும் அவர்களை எந்த இராணுவ முகாமில் மறைத்து வைத்துள்ளார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தாம் சென்று பார்வையிட நடவடிக்கை எடுக்கள்.

இதேவேளை, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் கோரப்பட்டது எதிர்க் கட்சித் தலைவரிடம் கோரப்பட்டது

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டறிந்து தருமாறு கோரி தாம் இன்றுடன் 54 நாட்களாக இந்த வீதிக் கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தமது உணர்வுகளைச் சிங்கள ஆட்சியாளர்கள் புரிந்துகொள்கின்றார்கள் இல்லை.

இன்று சித்திரைப் புத்தாண்டு. இச் சித்திரைப் புத்தாண்டை நாட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட தாம் தமது பிள்ளைகளைத் தொலைத்த நிலையில் கண்ணீரோடு கலங்கித் தவிப்பதாகவும் கூறிக் கண்ணீர் விட்டார்கள்.

தமது பிள்ளைகளைக் கண்டறிந்து தமது போராட்டத்திற்கு நல்ல முடிவு கிடைக்க எதிர்க்கட்சித் தலைவராகிய தாங்கள் எமக்கு விரைந்து உதவ வேண்டும். தங்களது காலத்தில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகின்றோம் என காணாமல் போனோரது உறவுகளால் கோரப்பட்ட போது,

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனால் காணாமல் போனவர்களது உறவுகளின் உணர்வுகளைத் தாம் புரிந்துகொண்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் விரைவாகத் தீர்வு காணுமாறு அரசிடம் கோரியுள்ளோம்.

இவ்விடயத்திற்குத் தீர்வினை எட்டுவதற்கு முயற்சிக்காது தட்டிக்கழிக்கப்பட்டு வருவது போன்றதாகவே தானும் உணர்ந்துள்ளதாகவும். எமது மக்களின் காணாமல் போனோர் பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காண்பதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உதவ வேண்டும்.

இது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தாம் உயர் மட்ட நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும். மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளில் மிகவும் முக்கியமான முதன்னையான பிரச்சினையாகவே காணாமல் ஆக்கப்பட்டோரது பிரச்சினை காணப்படுகின்றது.

இப்பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துத் தீர்வு காணப்பட வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்குக் காணப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.