ஹே விளம்பி வருடத்திலாவது வடகிழக்கு மக்களின் போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்கட்டும்

மலர்ந்துள்ள ஹே விளம்பி புதுவருடம் தமிழ் இந்து மக்களுக்கு மிகவும் முக்கியமான வருடமாக அமைகின்றது. புனித நாளான வெள்ளிக்கிழமை வருடம் பிறந்திருப்பதினால் இவ்வருடம் முக்கியத்துவம் பெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஹே விளம்பி 60 வருடத்திற்கு முன் பிறந்து மீண்டும் இம்முறை பிறந்திருக்கின்றது. புது வருடத்தினத்தன்று இந்துக்கள் அனைவரும் பிற உயிர்களை வதைத்து உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மரக்கறி வகைகளை உட்கொள்ளப் பழகி நோயற்ற வாழ்வை வாழ வேண்டும்.

தமிழ் இனம் என்ற அடிப்படை வரலாற்றில் நாம் இந்துக்களாகவே வாழ்ந்து வருகின்றோம். அதன் காரணமாகத்தான் இவ்வாறான வருடங்கள் இந்து மக்கள் மத்தியில் முக்கிய இடம்வகிக்கின்றது.

இன்றைய கால கட்டத்தில் ஹேவிளம்பி வருடத்திலாவது வடகிழக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் விடயங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்.

பல ஆண்டு காலமாக சிறையில் வாடும் தமிழ் உறவுகள், ஈழ விடுதலைக்காக போராடி உயிர்களை இழந்து தவிர்க்கும் உறவுகள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கும் ஆண்டாக அமையவேண்டும்.

கடந்த காலங்களில் இருந்து தமிழ் இந்து மக்கள் பல்வேறு பட்ட தரப்பினர்களின் மூலமாக பல துன்பங்களுக்கு ஆளாகி வருகின்ற இவ்வேளையில் அனைத்துக்கும் ஒரு தீர்வைப்பெற்றுத் தரும் ஆண்டாக அமையவேண்டும்.

இன்றைய நாளில் வடகிழக்கு பகுதிகளில் பல உறவுகள் பல்வேறுபட்ட தேவைகளை முன்வைத்து போராட்டங்களை நடாத்தி வருகின்ற வேளையில் எவ்வாறு தமிழர்களுக்கு நல்ல புதுவருட ஆண்டாக அமையுமென மேலும் தெரிவித்தார்.