பாதுகாப்பு அமைச்சில் இன்று முக்கியச் சந்திப்பு

காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனை உள்ளடங்கலாக, வடபகுதியில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று திங்கட்கிழமை (17) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பொது மக்களின் காணிகளை முப்படையினரும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதனை விடுவிக்குமாறு பல தடவைகள் கோரியிருந்தும் இதுவரையில் விடுவிக்காத நிலையில் மக்கள் தாங்களாவே போராட்டங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.

இதேவேளை காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் உரிய பதிலை வழங்குமாறு கோரி போராட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், படைகளின் வசமிருக்கின்ற பொது மக்களின் பிரச்சினைகள் குறித்து, இன்று (17) கலந்துரையாடப்படவுள்ளன. இக்கலந்துரையாடலில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படைகளினதும் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காணிகளை விடுவிப்பது குறித்தும் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது ஆராயப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.