முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியையும், வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியையும் விடுவிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதியில் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விடுவிப்புத் தொடர்பில் அடுத்த மட்டத்தில் ஜனாதிபதி – பிரதமர் மட்டத்தில்
பேசவேண்டியுள்ளது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் கடந்த திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாக முதலாவது கூட்டம் முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான கூட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னர், கேப்பாப்பிலவுக் காணிகளை நேரில் சென்று அடையாளப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது. இவற்றில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியதாவது:-
“முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், படைத்தரப்பினர் மக்களுக்கு மாற்றுக் காணி வழங்குவது தொடர்பாகவும் நட்டஈடு கொடுப்பது பற்றியும் பேசினர். இதனை மக்களும், நாங்களும் எதிர்த்தோம். இதனைப் பற்றிப் பேசக் கூட்டம் கூட்டப்படவில்லை என்பதையும் அவர்களுக்கு அழுத்தி உரைத்தோம்.
இதன் பின்னர் கேப்பாப்பிலவில் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டோம். மக்கள் தங்கள் காணிகள் அடையாளம் தெரியாதவாறு உருமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினர். வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு முதன்மை வீதியின் இடது பக்கத்தில் 67 குடும்பங்களுக்குச் சொந்தமான 111 ஏக்கர் காணியை விடுவிக்கத் தீர்மானித்திருப்பதாகப் படைத் தரப்பினர் கூறினர். அந்தக் காணியில் உள்ள இராணுவத் தளபாடங்களை இடமாற்றுவதற்குக் காலம் தேவைப்படுவதாகவும் விரைவில் அதனை விடுவிப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்தக் காணிகளுக்குள் சென்று பார்வையிடவில்லை.
வீதியின் மறுபுறத்தில், பாதுகாப்புத் தரப்பினரின் பிரதான முகாம் அமைந்துள்ளது. அதற்குள்ளே மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவற்றை விடுவிப்பது தொடர்பில், அடுத்த மட்டத்திலேயே பேச வேண்டியுள்ளது. முகாமுக்குள் முடக்கப்பட்டுள்ள வற்றாப்பளை – புதுக்குடியிருப்பு வீதியும் விடுவிக்கப்படும்” – என்றார்.
இந்தச் சந்திப்புக்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா, சிவசக்திஆனந்தன் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இராணுவ முகாமுக்குள் அலைபேசிகளுடன் மக்கள் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Home News கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்

கேப்பாப்பிலவில் 111 ஏக்கரை மட்டும் விடுவிப்பதற்குப் படையினர் இணக்கம்! – கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தகவல்
Apr 21, 2017
Previous Postகாணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது – சுமந்திரன்
Next Postஇயேசு கிறீஸ்துவை இறை தூதனாக ஏற்றுப் பணிந்து வருபவன் நான்!! திரிவுபடுத்தப்பட்ட செய்திக்கு வருத்தம்!!!