வவுனியா புதிய பஸ் நிலையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆனந்தன் எம்பி கோரிக்கை!

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை மீண்டும் பயன்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சுக்கள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பஸ் நிலையத்தை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா யாழ் வீதியில் 195 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன் ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

எனினும் தனியார் போக்குவரத்து சபைக்கும், இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக புதிய பஸ் நிலையம் கடந்த மூன்று மாதங்களாக செயற்படாமலுள்ளது.

இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கடந்த 3 மாதங்களாக செயற்பாடாமை தொடர்பாக இளைஞர்குழுவொன்றுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது செயற்படாமலுள்ள புதிய பஸ் நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான பணிகளை மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சுக்கள் மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.