காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: இரு வாரங்களில் தீர்வு கிடைக்கும்!

“நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இந்த அரசுக்கு வாக்களித்தோம். ஆனால், அந்த விடயங்கள் எவையும் உருப்படியாக நடைபெறவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசில இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறக் கூடாது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வு ஒன்றைப் பெற்றுத்தர முயற்சி செய்கின்றோம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலையும், விடுவிப்பையும் வலியுறுத்தி கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று சனிக்கிழமை 62ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் இரண்டு அல்லது மூன்றாம் திகதிகளில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் பல பிரதிநிதிகளைச்  சந்திக்கவுள்ளோம். அதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவோம்.
இவ்வளவு காலமும் சர்வதேச சமூகம் தற்போதைய அரசுக்குப் போதிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. எனவே, இனி நாங்களும் சேர்ந்து இந்த அரசுக்கு சர்வதேச சமூகத்தைக் கொண்டு போதிய அழுத்தத்தைக்  கொடுத்து பிரச்சினைகளுக்குரிய தீர்வை நோக்கிப் பயணிக்கவேண்டும்.
மேற்குல நாடுகள் இந்த அரசுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று எங்களோடும் பேச்சு நடத்தித்தான் ஐ.நாவில் கால அவகாசத்தை வழங்கினார்கள். நாங்களும் இந்தத் தீர்மானத்துக்கு உடன்பட்டோம்.
மாறாக சர்வதேச சமூகத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டு விடுவோம்.
நாங்கள் ஓர் அரசியல் கட்சி; நாடு அல்ல. ஆகவே, இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தோடு சேர்ந்து நாங்களும் ஒன்றாக பயணித்தால்தான் இந்த அரசு எங்களைக் கைவிட்டாலும் சர்வதேச சமூகம் எங்களைக் கைவிடாது.
எனவே, நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவேதான் நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணங்கி நிற்க விரும்புகின்றோம்.
இதில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் வேறுபட்டு நிற்பதாகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளில் அக்கறையின்றி இருப்பதாகவோ நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஒருமித்துத்தான் விடயங்களை செய்கின்றோம்.
ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தினர் மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து எங்களைச் சந்தித்தபோதும் கூட நாங்கள் ஒருமித்தே கருத்துக்களைக் கூறியிருந்தோம்” – என்றார்.