சொந்த அரசியல் இலாபத்துக்காக மக்கள் ஆணையை மீறக்கூடாது!

“சொந்த  அரசியல் இலாபத்துக்காக மக்கள் வழங்கிய ஆணையை  மீறும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்படக்கூடாது.  மீதொட்டமுல்ல சம்பவத்தைவிட பாரிய அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். எனவே, அவற்றைத் தடுப்பதற்குரிய பொறிமுறை பற்றி சிந்திக்கவேண்டும். இதற்காக அரசியல் கலாசாரத்திலும் மாற்றம் ஏற்படவேண்டும்.”
– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
மீதொட்டமுல்ல பேரனத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைத்து அது மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“மீதொட்டமுல்ல குப்பைமேடு அமைந்துள்ள பகுதியில் அனர்த்தம் இருக்கின்றதென அறிவிக்கப்பட்டிருந்தது.. எனினும், அசமந்தமான செயற்பாடுகளால் அப்பாவி மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்தம் இருக்கின்றதென எச்சரிக்கை விடுக்கப்பட்டும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை? குப்பையிலும்  அரசியல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல் கலாசாரம் அவ்வாறானதாக மாறிப்போயுள்ளது.
குறிப்பாக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அரசியல் தலையீடு இன்றி முன்னெடுக்கப்படுவதில்லை. இது துர்திஷ்ட நிலையாகும்.
அதேவேளை, தமது சௌகரியத்துக்காக அதிகாரத்தை மீளப்பெறும் நோக்கில் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்க்கும் கலாசாரம் உருவாகியுள்ளது. இதன்போது நாடு பற்றி சிந்திக்கப்படுவதில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய ஆணையை மீறும் செயற்பாடாகவே இது அமைந்துள்ளது. இப்படியான அரசியல் அணுகுமுறை மாறவேண்டும்” – என்றார்.
மீதொட்டமுல்ல அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நட்டஈட்டை வழங்கவேண்டும், அவர்களை வேறு இடங்களில் தங்கவைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், குறித்த சம்பவத்தைக்  கருத்தில்கொண்டு குப்பைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கிலேயே குறித்த பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்தார்.
சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அரசு உரிய தீர்வை  வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.