ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது எவரும் எங்களைக் கைவிடவில்லை – சுமந்திரன்

ஐ.நா, பன்னாட்டுச் சமூகம் உட்பட எவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தந்தை செல்வாவின் 40 ஆவது நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. அவர் மேலும் தெரிவித்ததாவது,
இப்பொழுது சில ஊடகங்கள் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் தேவையில்லாமல் இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். கருத்துப் பரிமாற்றம் நல்லதுதான். ஆனால், தெளிவாகவே இல்லாத விடயத்தை இருக்கிறதென்றும் இருக்கிறதை அதன் சாரமே இல்லையென்றும் ஊதிப் பெருப்பித்துச் சொல்லுவது ஊடக தர்மத்துக்குப் புறம்பானது.
ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் தாம் வெளியிடும் விடயங்களின் உண்மைத் தன்மையினை ஒன்றுக்குப் பலமுறை ஒப்பு நோக்கிப் பார்த்து வெளியிட வேண்டும்.
தீர்மானங்களை, பரிந்துரைகளை, அறிக்கைகளைப் அலசி ஆராய்ந்து படித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர் சொல்லி விட்டார் என்பதற்காக அதுதான் உண்மை என்றிருந்து விடக் கூடாது, அவரது கருத்தோடு சேர்த்து உண்மையையும் மக்களுக்கு ஊட்ட வேண்டும். இதுதான் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பொறுப்பு வாய்ந்த கடமையாகும்.

எல்லாரும் எங்களைக் கைவிட்டு விட்டார்கள் என்கின்ற ஒப்பாரி இப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றது.ஆனால், உண்மை அதுவல்ல. யாரும் எங்களைக் கைவிடவில்லை. எங்களுக்குச் சாதகமான எத்தனையோ விடயங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. 1950 ஆம் 1951ஆம் ஆண்டிலே ஆரம்பித்த அந்தப் பயணம் படிப்படியாக இன்றைக்கு இந்த அளவுக்கு வந்து முன்னேற்றம் கண்டிருக்கின்றது.
மிக முக்கியமாக அரசியல் தீர்வொன்று வழங்கப்பட வேண்டும், புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த விடயத்தை இலங்கை அரசு 2015 ஆம் ஆண்டே பன்னாட்டுச் சமூகத்துக்கு வாக்குறுதியாகச் சொல்லியுள்ளது.
இலங்கையிலே இதற்கு முன்னர் இடம்பெற்ற அத்தனை விடயங்களும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதமும் தரப்பட்டிருக்கிறது. புதிய அரசமைப்புத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது.இது இலங்கை அரசு பன்னாட்டுச் சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளாகும்.
முன்னர் நடந்திருக்காத இந்த விடயங்கள் பன்னாட்டு மட்டத்திலே நடந்தேறியிருக்க இங்கே ஒன்றுமே நடக்கவில்லை என்று கூப்பாடு போடுவது சரியல்ல.இத்தகைய முன்னேற்றங்களோடு ஈழத் தமிழர் அரசியல் நகர்வு திருப்பு முனையில் சென்று கொண்டிருக்கின்றது.
உலகம் எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. தந்தை செல்வாவின் வழியிலே வந்த சம்பந்தன் தமிழர்களுக்குத் தலைவனாகக் கிடைத்திருப்பது ஒரு பெரும் பாக்கியம் என்றே கருத வேண்டும் – என்றார்.