இராணுவத்தினர் அவர்களின் மனதிலிருக்கும் தவறானதோர் கருத்தை நீக்கவேண்டும். புலிகளிட மிருந்து காணிகளை கைப்பற்றிய பின்னர் அது தமது காணிகள் என நினைக்கின்றார்கள்.
இங்கு நடைபெற்றது உள்ளூர்க் கலவரமாகும். எனவே கலவரம் முடிந்ததும் இராணுவம் காணிகளை விட்டு வெளியேறுவது அவசியமானது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், முன்னைய அரசு எமக்கு எதையும் தரமாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறியது. அதனால் நாம் எதிர்த்து நின்று சண்டையிட்டோம்.
தற்போதைய நல்லாட்சி அரசு தருகிறோம் தருகிறோம் என்று கூறுகிறது. ஆனால், எதனையும் தருவதாகத் தெரியவில்லை. இந்நிலையில் நாம் எவ்வாறு அவர்களுடன் சண்டையிடுவது என்றும் கேள்வி எழுப்பினார்.
அவருடனான முழுமையான செவ்வி வருமாறு,
கேள்வி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகைதரும்போது அவரிடம் வடமாகாண மக்களுக்கு நன்மையளிக்கக் கூடிய வகையில் ஏதாவது கோரிக்கையொன்றை முன்வைக்கும் எண்ணம் உங்களிடம் இருக்கின்றதா?
பதில்: அவ்வாறான எண்ணம் தற்போது இல்லை. ஆனால், பலாலி விமான நிலையத்தை, மக்களது சிறு அளவு காணி கூட எடுக்காமல் அதை நவீனப்படுத்தி பயன்படுத்த முடியும் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆகவே அதை அவ்வாறே புனர்நிர்மாணம் செய்து தரும்படி கேட்கலாம் என்று அண்மையில் சிலருடன் கலந்துரையாடியுள்ளேன்.
கேள்வி: வட, கிழக்கு காணி விடயங்களில் முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியால் முடிவெடுக்கமுடியும்.
ஆனால், ஜனாதிபதி அந்த முடிவெடுக்கும் அதிகாரத்தை இராணுவத்தினரிடம் வழங்கியது போன்ற தோற்றப்பாடு எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, இராணுவத்தினருடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஆகவே, இது குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்: நீங்கள் சொல்வது உண்மை. அதாவது படையினர் போர் முடிவுற்ற ஒரு காலகட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் ஆற்றுப்படுத்தலின் கீழ் செயற்படவேண்டியவர்கள்.
போரில்லாத நிலைமைகளில் தங்களுக்கு விருப்பமான விதத்தில் அவர்களால் செயற்பட முடியாது.
போர் முடிந்து எட்டு வருடங்கள் முடிந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகளுடன் சரிசமமாக இருந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு இடமளிக்கக்கூடாது.
ஆனால், தற்போதைய அரசாங்கம் அவர்களுடன் சரிசமமாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு ஒரு சம அந்தஸ்தை கொடுப்பதென்பது சற்று சிந்திக்கவேண்டிய விடயமாகும்.
அத்துடன், வடக்கில் கிட்டத்தட்ட 150,000 இராணுவம் நிலைகொண்டுள்ள நிலையில் அவர்களை மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது.
அம்மக்கள் பிரதிநிதிகளுக்கு அது பின்னர் பாதிப்பை ஏற்படுத்தலாம். வேண்டுமென்றே அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதா என்றும் தெரியாது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயங்களில் எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பது எனக்குத் தெரியாது.
மீள்குடியேற்ற அமைச்சில் நடைபெறவேண்டிய காணி விடுவிப்பு சம்பந்தமான பேச்சுவார்த்தை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
தீர்மானங்களை எடுக்கக் கூடிய எங்களுடைய வலுவையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் நாங்கள் இழந்து வருகின்றோம் என்பதே இதன் அர்த்தமாகும். ஆனால், பொதுவாக இதுதான் நடந்துகொண்டுவருகின்றது.
காணிகளைப் பற்றி நாங்கள் இராணுவத்தினரிடம் கேட்டு அதன்படி நடந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இராணுவத்தினரிடம் காணிகளை விடுவிக்கின்றீர்களா எனக் கேட்டால், இல்லை என்றுதானே சொல்வார்கள்.
ஏனென்றால் இங்கு காணிகளை சுவீகரித்து வைத்திருப்பதன் மூலம் படையினர் வருமானம் தேடிக்கொள்கின்றனர்.
வீடுகளை கட்டி சுகமாக வாழ்கின்றனர். மேலும் வேறு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இங்கு இல்லாமலும் இல்லை.
ஆகவே, மேற்குறிப்பிட்ட விடயங்களைக் காரணங்காட்டி நாங்கள் காணிகளை விடுவிக்க முடியாது என்றே படையினர் கூறி வருகின்றனர்.
இந்தக் காரணங்களை முதல் ஆராய்ந்துபார்க்கும்பட்சத்தில் எந்தவொரு காரணமும் நியாயமில்லாத ஒரு காரணமாகவே தென்படும்.
வடமாகாண முதலமைச்சர் என்றவகையில் எந்தவிதமான பாதுகாப்பும் இராணுவத்திடமிருந்து எனக்குத் தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தப் பாதுகாப்பு விடயத்தை நாங்கள் பொலிஸாருடன் பார்த்துக்கொள்வோம். அத்துடன் எங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தைத் தந்தால் கூட அதுவும் எங்களுக்கு வசதியாகவிருக்கும்.
ஆனால், இராணுவத்தினர் தமது இருப்பை பாதுகாப்பதற்காக நடக்காததை நடந்ததாகக் கூறிக்கொண்டிருக்கின்றனர்.
கேள்வி: அப்படியென்றால் இராணுவத்தினருடன் கதைப்பது சாத்தியமில்லை என்கின்றீர்களா?
பதில்: அது அப்படியல்ல. இராணுவத்தினருக்கு இருக்கின்ற அந்தஸ்தைப் பார்க்கிலும் அதிக அந்தஸ்தைக் கொடுத்து கதைப்பதென்பது பிழையான விடயம் என்று சொல்கின்றேன்.
கேள்வி: காணியை விடுவிப்பது தொடர்பில் எவ்வித தந்திரோபாயத்தை கையாள்வது பொருத்தமென்று நினைக்கின்றீர்கள்?
பதில்: எனது சார்பில் வடமாகாண சபை உறுப்பினரான குருகுலராஜா இராணுவத்தினருடனும் மீள்குடியேற்ற அமைச்சுடனும் காணி விடுவிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனது சார்பில் நான் அப்பேச்சுவார்த்தைக்கு வழங்கிய கடிதத்தில், முதலாவதாக இராணுவத்தினர் அவர்களின் மனதிலிருக்கும் தவறானதோர் கருத்தை நீக்கவேண்டும்.
அதாவது அவர்கள் விடுதலைப்புலிகளிடமிருந்து காணிகளை கைப்பற்றிய பின்னர் அந்தக் காணிகள் தம்முடைய காணிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
யுத்தம் நடந்தபோது அரசாங்கத்தின் அதிகாரம் முழு இலங்கையிலும் இருந்தது. ஏனென்றால், அரச உத்தியோகஸ்தர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்தது அரசாங்கம்தான்.
அந்தக்காலத்தில் அரசாங்கத்தின் அதிகாரப்பரவல் இந்த முழு இலங்கையிலும் இருந்தது.
ஆகவே, நடந்தது ஓர் உள்ளூர்க்கலவரம். அந்த உள்ளூர்க்கலவரம் முடிந்தபின்னர் இராணுவம் அந்தக் காணிகளை விட்டு செல்லவேண்டும்.
ஆகவே, இராணுவம் இங்கு இருக்கவேண்டிய அவசியமில்லை. சகல அதிகாரமும் பொலிஸாரிடம் வழங்கப்படவேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கியே நான் ஒரு கடிதம் எழுதி அதை குருகுலராஜாவுக்கு அனுப்பியுள்ளேன்.
தந்திரோபாயம் என்றால், முதலாவது இராணுவத்தினரின் மனங்களில் இருக்கின்ற தவறான கருத்துக்களை முதல் களையவேண்டும். இரண்டாவது படையினர் அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நாங்கள் வெளிக்கொணர வேண்டும்.
மூன்றாவது தமது மக்களுடைய தேவைகளை கருத்திற்கொண்டு அதற்கு என்னென்ன தேவையோ அதை மேற்கொள்ளவேண்டும்.
அந்தவகையில் எம்முடைய மக்களின் காணிகளை விடுவிக்கவேண்டியது அரசாங்கத்தின் பாரியதொரு கடப்பாடாகும்.
நான்காவது யுத்தகாலத்தில் அதிகளவான படையினரை அரசாங்கம் உள்வாங்கியிருக்கின்றது.
ஆகவே, அவர்களை படையணியிலிருந்து படிப்படியாகக் குறைத்து சமூகத்தோடிணைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கேற்ற வழிவகைகள் செய்யப்படவேண்டும்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதி ஒதுக்கீட்டு நிதியில் இதை செய்யலாம் என்று அவரிடம் நாம் கூறியிருந்தோம்.
அதை இன்னும் செய்யவில்லை. அத்துடன், போரினால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்யவேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம்.
அதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை. சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் என்று ஒதுக்கப்பட்ட நிதி எங்களுடன் கலந்தாலோசிக்காமல் செலவழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகளை நடத்துதல், இராணுவத்தினரைக் குறைத்தல் உள்ளிட்ட பல விடங்களை நாங்கள் அரசாங்கத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்குமிடையிலான உறவுமுறை தற்போது எவ்வாறு காணப்படுகின்றது?
பதில்: எங்களுக்கும் மத்திய அரசாங்கத்துக்குமிடையில் அப்படி பெரியதொரு பிரச்சினை இல்லை.
ஆனால், மத்திய அரசாங்கமோ எல்லாவற்றையும் தருகின்றோம் தருகின்றோம் என்று எதையும் தருவதில்லை. தரமாட்டோம் என்றால் எதிர்த்து நின்று சண்டை பிடிக்கலாம். தருகின்றோம் தருகின்றோம் என்று தராமல் விடுபவர்களுடன் எவ்வாறு சண்டைபிடிப்பது? இதுவே தற்போது காணப்படுகின்ற பிரச்சினை.
சென்ற அரசாங்கமோ தரமாட்டோம் என்று சொன்னது. ஆகவே, அவர்களுடன் சண்டைபிடித்தோம்.
ஆனால், தற்போதிருக்கின்ற அரசாங்கமோ தருகின்றோம் தருகின்றோம் என்று சொல்லிக்கொண்டுவந்தாலும் எதையும் தருகின்ற மாதிரித் தெரியவில்லை.
இவ்வாறானதொரு நிலைமையே தற்போதைய வடமாகாண சபை எதிர்கொண்டு வருகின்றது. ஆகவே, மத்திய அரசாங்கத்துடன் மனவருத்தப்படக்கூடிய ஓர் உறவே தற்போது வடமாகாணசபைக்கு இருந்துவருகின்றது.