தீர்வுகளை இலகுவாகப் பெற தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை அவசியம்!

“இந்த நாட்டு மக்கள் அனைவரும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும். இந்த நாடு என்னுடைய நாடு என்ற அந்தஸ்து வேண்டும் என முஸ்லிம்களை தமிழர்களும் தமிழர்களை முஸ்லிம்களும் ஏமாற்றிக்கொள்ள முடியாது. இரு தரப்பினரும் ஒற்றுமைப்பட வேண்டும். அப்போதுதான் தீர்வுகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முஸ்லிம் தலைமைகளின் பூரண ஒத்துழைப்பை நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம்.”
– எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு தர்மசங்கரி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த நாட்டு மக்கள் அனைவரும் சமத்துவத்துடன் வாழ வேண்டுமென்றால் ஆட்சி முறைகளில் மாற்றங்கள் வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தை இழந்துவிடக் கூடாது. இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு ஒரு சந்தர்ப்பம் நமக்குக் கிடைத்தது. அதனை நாம் கைநழுவி விட்டோம். அதேபோன்று நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 1987களில் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவும் தவறவிடப்பட்டுவிட்டது. எனவே, தற்போது மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனையும் தவறவிடாது சரியாக சிந்தித்து முடிவெடுத்து எமது உரிமைகளை வெற்றிகொள்ள வேண்டும்.
தமிழர்கள் மற்றவர்களின் உரிமைகளை மதித்து தமது உரிமைகளைப் பெற வேண்டும். இன்று சர்வதேச சமூகம் இந்த நாட்டில் நடக்கும் விடயங்களை அவதானித்துக் கொண்டு இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமானால் இந்த நாட்டில் அரசியல் யாப்பு மாற்றப்பட்டு நியாயமான தீர்வு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை அடைவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல பணிகளை நிறைவேற்றி வருகின்றது.
இவ்வாறு ஒரு சிறந்த தீர்வு கிடைக்குமானால் அது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கு பயனுள்ளதாக அமைவதுடன் நாட்டுக்கும் சிறந்த விடயமாக அமையும்” – என்றார்.