வட மாகாண போக்குவரத்து: இ.போ.சபை தலைவரை சந்தித்த த.தே.கூட்டமைப்பின் எம்.பிக்கள்

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இ. போ.சபையின் போக்குவரத்து பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தக்கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இ.போ.சபை தலைவரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இன்றைய தினம் காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் முறையான வீதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் பல கிராமங்கள் தற்போதும் இருந்து வருகின்றது.

இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வைத்திய தேவை மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்காக நகர் பகுதிகளுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் உள்ளனர்.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தமது கிராமங்களிலிருந்து பல கிலோ மீற்றர்கள் நடந்து சென்று பிரதான வீதிகளில் பேருந்து சேவையை பெற்றுக் கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையை கருத்தில் கொண்டு இ.போ.ச தலைவரை சந்தித்து இன்று கலந்துரையாடினோம்.

இதன் போது மேற்படி விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளதுடன், வடக்கில் இ.போ.ச பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் ஊடாக கஷ்ட பிரதேசங்களுக்கும் போக்குவரத்துச் சேவையை விஸ்தரிப்பதற்கான கோரிக்கையை முன்வைத் திருக்கின்றோம்.

எனினும் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் இல்லை. எனவே இந்த விடயம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சருடனும் பேசுமாறு இ.போ.ச தலைவர் கேட்டி ருக்கின்றார். அதற்கமைய போக்குவரத்து அமைச்சருடனும் இது தொடர்பாக நாங்கள் பேசுவதற்கு தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் இ.போ.சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு வடமாகாணத்தை சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்புக்களை அதிகம் வழங்குங்கள் என கேட்டிருக்கிறோம்.

அதற்கு சாதகமான சமிக்ஞையை அவர்கள் காட்டியிருக்கின்றார்கள்.

மேலும் வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு முதலில் இ.போ.சபையினர் செல்லவேண்டும் அதன் பின்னர் தனியார் வருவார்கள் என்பதை கூறியிருக்கிறோம்.

அதனையும் அவர்கள் சாதகமாக பரிசீலிப்பதாக கூறியிருக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.