மோடியுடனான சந்திப்பின் போது தமிழரின் சமகால விடயங்கள் பேசப்படும்!

தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் நிச்சயமாகப் பேசப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை வரும் இந்தியப் பிரதமர் இரு நாட்கள் தங்கியிருப்பார்.

இலங்கைப் பயணத்தின்போது பல்வேறு அரசியல் தரப்புக்களையும் இந்தியப் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அவர் நிச்சயம் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இது தொடர்பான ஏற்பாடுகளை இந்தியத் தூதரகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறினார்.

பெரும்பாலும் இந்தச் சந்திப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறக்கூடும் என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இதன்போது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் பேசப்படும். அத்துடன் மிக முக்கியமாக அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்படும் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேலும் கூறினார்.