38

இலங்கை அரசாங்கம் மெதுவாகவே நகர்கிறது’

இலங்கை அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம். என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று, 12ஆம் திகதி மாலை  கட்டுநாயக்கவில் இடம்பெற்றது.

இதன்போதே இந்திய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் த.தே. கூ.வின் தலைவருமான இராசம்பந்தன் கூறியதாவது,

“அரசியலமைப்பு மாற்றம் சம்பந்தமான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே செல்கின்றது. 2016ஆம் ஆண்டுக்குள் தீர்வு வருமென்று எதிர்பார்த்திருந்தோம். இந்த வருடத்துக்குள்ளாவது ஒரு தீர்வு வரவேண்டும். வட,கிழக்கு தமிழர்கள் பாரம்பரியமாக, பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்கள். இங்கு சமஸ்டி அமைப்பின்கீழ் ஒரு நியாயமான தீர்வு வரமுடியும். அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தமாக கூறப்போனால், ஒரு கையால் கொடுத்துவிட்டு மறு கையால் எடுக்கும் நிலைமையையே காணமுடிகின்றது. ஆகவே, குறைந்தது இந்தியாவில் இருக்கக்கூடிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களாவது இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

அத்துடன், காணாமல் போனவர்கள் விடயம், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை, இளைஞர் யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை என்பன தொடர்பில் எடுத்துக் கூறியதோடு, இந்தியா பிரத்தியேகமாக வடக்கு, கிழக்குக்கு பெரியளவில் முதலீடுகளைச் செய்து வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கருத்துக் கூறிய இந்தியப் நரேந்திர பிரதமர் நரேந்திரமோடி,

இது சம்பந்தமாக நாம் ஏற்கெனவே அரசாங்கத்திடம் கூறியிருக்கின்றோம். அரசாங்கம் மிகவும் மெதுவாகவே நகர்வதை நாங்கள் உணர்கின்றோம். அரசாங்கம் அரசியல் தீர்வு விடயத்தில் தாமதித்துக் கொண்டிருந்தால் சர்வதேசம் அழுத்தங்களைக் கொடுக்கும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பெரியளவில் உதவ இருக்கின்றோம். இது சம்பந்தமாக அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விரிவாகக் கதைத்துள்ளேன். அத்துடன் மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுத்து அவற்றுக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிக்கின்றோம்” என்றார்.