நியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெறும்- இரணைதீவில்- சி .சிறீதரன்

இரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்களுக்கு விரைவில் சென்றுமக்கள் குடியேறி வாழமுடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு, மக்களின் போராட்டம் வெற்றிபெறும் அதற்கான பதில் எதிர்வரும் 20 ஆம் திகதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இரணைதீவு மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களுக்குச் செல்ல விடுமாறு கோரி இன்றுடன் 14 நாட்களாக இரணைமாதாநகர் இறங்குதுறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளானர்.

இந்நிலையில் இரணைதீவு கத்தோலிக்க பங்குக்குரிய மக்கள்; இரணைமாதாநகர் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் இன்றையதினம் வழிபாடுகளை முடித்துக்கொண்டு அவர்களின் அழைப்பின் நிமித்தம் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை,இன்று (14.05.2017) காலை 8.00 மணியளவில் இரணைதீவுபங்குத் தந்தை அருட்செல்வன் தலைமையில் சந்தித்து தமது பூர்வீக வாழ்விடங்களுக்குத் தாம் செல்வது பற்றிக் கலந்துரையாடினர்.

அவர் அங்குமேலும் கூறுகையில்,

இரணைதீவு தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடம் அங்கு எமது மக்கள் சென்று மீண்டும் குடியேறி தமக்குரிய சொந்தநிலங்களில் வாழவேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் உறுதியாகவுள்ளோம்.

எமது மக்களில் பூர்வீக வாழ்விடங்களை எமது மக்களிடமே வழங்குமாறு நாம் மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலம் முதல் தற்போது வரை உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கூறிவருகின்றோம்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர்களின் பங்காளிகளாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்போது நாம் இரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் விடுவிக்கப்படவில்லை, அவர்களின் சொந்த நிலங்கள் விடுவிக்கப்பட்டு அவர்கள் அங்கு மீள்குடியேற்றப்பட வேண்டும்.

இரணைதீவு மக்கள் தமது சொந்த வாழ்விடமான இரணைதீவுக்குச் செல்வதற்கு விரும்பவில்லை, அதனால் அவர்களுக்கான இருப்பிடங்கள் இரணைமாதா நகரில் சொந்தமாக வழங்கப்பட்டுவிட்டன.

அதனை இரணைதீவு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என அப்படிக் கூறியவர் மகிந்த ஆட்சிமுடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களால் அவரும் நிராகரிக்கப்பட்ட பின்னர் அவர் இப்போது உங்களிடம் வந்து உங்கள் நியாயமான போராட்டத்தில் கலந்துகொண்டு கூறுகின்றாராம்.

இரணைதீவு மக்களின் பூர்வீக வாழ்விடங்கள் அவர்களுக்கே சொந்தம் அவர்களிடமே வழங்கவேண்டும் என்று. அப்போது ஆடசியில் இருந்த போது ஒருகதை இப்போது ஒருகதை சொல்லி எமது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அவர்கள் போல எமது மக்களை நாம் காட்டிக்கொடுத்து ஏமாற்ற முயலவில்லை.

நாம் எப்போதும் அப்படி நடந்துகொண்டதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் ஒரே கருத்தையே உறுதிபட வெளிப்படுத்தி வருகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப் பின் எமது மக்களின் அபிலாசைகளை ஜனநாயக வழியில் வென்றெடுப்பதற்கான ஒரேயொரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மட்டுமே உள்ளோம்.

எமது மக்களின் விடுதலைக்கான விடிவு நோக்கிய பயணத்தில் நாம் பின்வாங்கப் போவதுமில்லை குறுக்குவழியால் சென்று எமதுமக்களை ஏமாற்றிவிட நினைத்ததும் இல்லை.

எமது தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மை நம்பித்தான் தெரிவுசெய்துள்ளார்கள். அவர்களது நம்பிக்கைக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடும் தார்மீகப் பொறுப்பும் எம்மிடமே உள்ளது.

மக்களை மறந்து எமது மக்கள் பிரச்சினைகளை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துபவர்கள் நாமில்லை. எப்போதும் எமது மக்களுடன் கூட இருந்து எமது மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இணைந்திருந்து முன்னின்று செயற்படுபவர்கள்தான் நாம்.

இரணைதீவு விடுவிப்புத் தொடர்பில் நான் பலதடவைகள் நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.

இரணைதீவு பற்றி நான் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்த போது, இரணைதீவு மக்கள் பற்றிய தவறான எண்ணப்பாடுகள் பெரும்பான்மை இனப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதனால் அவர்கள் எதிர்த்து என்னுடன் வாதிட்டார்கள். இரணைதீவு மக்கள் அங்கு குடியேற தாம் விரும்பவில்லை என கூறியுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன என்னிடம் நாடாமன்றத்தில் தெரிவித்தார்.

அதனால் இரணைதீவு மக்கள் பிரச்சினை பற்றி உண்மையான நிலைப்பாட்டை அறிய வேண்டுமாகவிருந்தால் நீங்கள் அந்தமக்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு நேரில் வாருங்கள். அந்த மக்களிடமே கேட்டு உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன் அதனை ஏற்றுக்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன அவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி இங்கு வந்து உங்களைச் சந்திப்பதற்குச் சம்மதித்துள்ளார்.

இங்குவரும் அவர் உண்மை எது பொய் எது என்பதை நேரடியாகவே தெரிந்துகொள்வார். அதனைத் தொடர்ந்து எமது மக்களின் பூர்வீக வாழ்விடமான இரணைதீவை மக்களிடமே வழங்க உரியநடவடிக்கை எடுப்பார் என்றநம்பிக்கை எமக்குள்ளது. இதற்கு உங்களது வாழ்விட மீட்புக்கான உறுதியான போராட்டமேதான் பேருதவியாக அமைந்துள்ளது.

எக்காரணத்தைக் கொண்டும் உங்களது சொந்த நிலம் உங்களிடம் வழங்கப்படும் வரை உங்களது நியாயமான போராட்டத்தைக் கைவிட்டுவிடாதீர்கள்.

நியாயமான போராட்டங்கள் இறுதியில் வெற்றிபெறும். உங்களது சொந்த நில மீட்புக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் என்றைக்கும் எமது மக்களுடன் கூட இருந்து மக்களுக்காகச் செயற்படுவோம் என்றார்.