காணாமல் போனோர் அலுவலகத்தை ‘உடனடியாக செயற்படுத்துக – எம்.ஏ. சுமந்திரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கடந்த பல வருடங்களாக சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர் என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம், எந்தவொரு தாமதமும் இன்றி வெகு விரைவில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, “ஆட்கள் காணாமல் போகச் செய்வதை குற்றவியல் குற்றமாக்கு” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு, கொழும்பிலுள்ள தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், நேற்று (16) இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவரும், காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர் என்று மனப்பூர்வமான நம்புகின்றனர். இது, கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்து வரும் சித்திரவதையாகும்.

“இன்று (நேற்று) காலை யாழ்ப்பாணத்திலிருந்து நான் கொழும்புக்கு வந்தபோது, கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதியில், வீதிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிந்து தருமாறு கோரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதே போன்று, கொழும்பில் எவராவது அமர்ந்திருந்தால், எந்தவொரு கட்சியோ அமைப்புமோ கருத்தில் கொண்டிருக்காது. ஆனால், வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டதாலேயே, பரபரப்பாக பேசப்படுகின்றது.

“1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில், காணாமல் போனோரின் தொகை, 60,000 ஆக இருந்தது. அதன் பின்னர் 2008 மற்றும் 2009களில் காணாமல் போனோரின் எண்ணிக்கை, 30,000 ஆக இருக்கின்றது. பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் காரணமாகவே, அநேகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதுவொரு பாரதூரமான பிரச்சினையாகும்.

“காரணம், அவர்கள் அனைவரும் எமது பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள். நாட்டிலுள்ள பிரஜைகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியவர்கள். எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாமல் இருப்பதற்கும், இதுவே முதன்மைக் காரணமாக உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, உயர்ந்த பதவிகளை வகிப்பவர்களே ஆவர்.

“காணாமல் ஆக்கியோருக்கு, உண்மையாக தண்டனை வழங்கப்பட வேண்டுமானால், நிச்சயமாக, பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இழக்க வேண்டி நேரிடும். காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனரா அல்லது அவர்களுக்கு என்ன நடந்துவிட்டது என்பது தொடர்பிலான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது என்று அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.