இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த மே 18-ஐ துக்க நாளாக அனுசரிக்க வேண்டும்: உலக தமிழர்களுக்கு வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வேண்டுகோள்

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் மே 18-ம் தேதியை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த இறுதிக்கட்டப் போரில், மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் அத்துடன் போர் முடிந்தது.

இறுதிகட்டப் போரில் சுமார் 40 ஆயிரம் அப்பாவி பொதுமக் களைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாக ஐ.நா.சபை யின் புள்ளி விவரம் கூறுகிறது.

இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதற்கு இலங்கை அரசு செவிசாய்க்காமல் காலம் கடத்திவருகிறது. மேலும் போரின்போது கையகப்படுத்தப் பட்ட நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு நிறைவேற்றவில்லை. போரினால் புலம்பெயர்ந்த தமிழர்களை அவர்களுக்கு உரிய இடத்தில் மறுகுடியமர்த்தும் பணியும் சரியாக நடைபெறவில்லை.

8-வது நினைவு தினம்

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த மே 18-ம் தேதியை ஆண்டுதோறும் வெற்றி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச 2010-ம் ஆண்டு அறிவித்தார். ஆனால், அவருக்குப் பிறகு அதிபரான மைத்ரிபால சிறிசேனா, இந்த நாள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என 2015-ல் அறிவித்தார். இதன்படி இலங்கை அரசு சார்பில் நேற்று (மே 18-ம் தேதி) 8-வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மே 18-ம் தேதியை துக்க தினமாக அனுசரிக்க வேண்டும். இதை யொட்டி, 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இறுதிகட்டப் போரில் பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்தது பற்றிய உண்மை இன்னும் வெளி வரவில்லை. இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதனிடையே, போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழர்கள் கடந்த 12-ம் தேதி முதலே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். நேற்றும் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

எனினும், முள்ளிவாய்க்கால் தேவாலயம் அருகே 14 நாட்களுக்கு பொதுமக்கள் கூட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி புதன்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தார். தேசிய பாதுகாப்பு, அமைதி, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதி அமைப்பு (ஐடிஜெபி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.தரன் கூறும்போது, “கடந்த தேர்தலில் ஏராளமான எதிர்பார்ப் புடன் தமிழர்கள் வாக்களித்து புதிய அரசை கொண்டுவந்தனர். ஆனால் எங்களுடைய நம்பிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை.

காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை அரசு வெளியிடவில்லை. இதுபோல அரசியல் கைதிகளையும் விடுவிக்க வில்லை. இந்த விவகாரத்தில் அரசு மவுனம் காப்பது கவலை அளிக்கிறது. கடந்த 1987-ம் ஆண்டைப்போல (இந்திய இலங்கை ஒப்பந்தம்), இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.