நந்திக்கடலை விடுவிக்க 400 மில்லியன் கோரும் இராணுவம்!

நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை சிறிலங்கா இராணுவம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவுக்குப் பயணம் செய்த இரா.சம்பந்தன் முல்லைத்தீவு இராணுவமுகாமின் கட்டளை அதிகாரியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியிருந்தார்.

இதன்போது, கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் இராணுவத்தினரிடமிருக்கும் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளதுடன், இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடற்கரையோரப் பிரதேசத்தை விடுவிப்பதற்கு 400 மில்லியன் ரூபா தமக்கு வழங்கினால் மாத்திரமே தம்மால் அப்பிரதேசத்தை விடுவிக்கமுடியும் எனத் இராணுவ அதிகாரி தன்னிடம் தெரிவித்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு நந்திக்கடற்கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கும் நோக்கம் இல்லையெனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தான் மக்களின் காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுடன் கதைத்து விரைவில் தான் ஒரு முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அண்மையில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் அனைத்தையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தபின்னரே இராணுவத்தினரால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.