வடக்கு மாகாணத்தை கீழ்த்தரமானதாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் – வடக்கு முதல்வர்!

ஒழுக்கமற்ற முதலீட்டாளர்களின் நலனுக்காக வடக்கு மாகாணத்தை கீழ்த்தரமான ஒரு மாகாணமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

நேற்றையதினம் வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூட்டமொன்று நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 வீத வரி விலக்களிப்பு வழங்குவதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் முதலீடுகளுக்காக வட மாகாணத்தை கீழ்த்தரமாக பயன்படுத்த எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஒழுக்கமற்ற முதலீட்டாளர்களின் நலனுக்காக ஒரு அடிமட்ட மாகாணமாக வடமாகணத்தை பயன்படுத்த இடமளிக்க முடியாது என தெரிவித்திருந்தார்.

நாங்கள் எங்கள் பாரம்பரியத்தை பற்றி பெருமிதம் கொள்கிறோம்.  நாங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். மாறாக வெளியிலிருந்து வரும் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்பட நாம் தயார் இல்லை என இத்னபோது குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அரசியலில் சமஷ்டி அடிப்படையிலான கூட்டாட்சியை விரும்புவது போல் பொருளாதார துறையில் முழுமையாக இணைந்து செயற்பட நாம் நிச்சயமாக தயாராக உள்ளோம் எனவும் வடமாகாண சபை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.