70 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் உத்தேசம் இராணுவத்துக்கு இல்லை – சம்பந்தன்!

கேப்பாப்புலவில் படையினர் வசமுள்ள 432 ஏக்கர் காணிகள் ஒரு மாதத்துக்குள் விடுவிக்கப்படும் எனக் கேப்பாப்புலவு மக்களிடம் நேற்று உறுதியளித்தார் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்.

111 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் 6 மாத கால அவகாசம் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்பதற்காக முல்லைத்தீவுக்கு நேற்று வருகை தந்­த எதிர்க்கட்சித்தலைவர், அங்கு தமது காணிகளை விடுவிக்கக் கோரி 80 நாள்களாகத் தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதன் பின்னர் கேப்பாப்புலவு இராணுவ முகாம் தளபதியையும் சந்தித்தார். இதனையடுத்து மீண்டும் வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மிகுதியாக உள்ள 70 ஏக்கரை விடுவிக்கும் எண்ணம் இராணுவத்துக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கேப்பாப்புலவு இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தைச் சென்று பார்வையிட்டோம். அதற்குப் பொறுப்பாக இருக்கும் அதிகாரியான பெர்னாண்டோ உட்படப் படை அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

அங்கு 243 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கக் கூடிய நிலையில் உள்ளது. 189 ஏக்கர் காணியை ஒரு மாத்துக்குள் விடுவிப்பதாக நிச்சயமாகச் சொல்கிறார்கள். அதனை விரைவாக விடுவிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும். மேலும் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்குத் தமக்கு 6 மாத காலம் தேவைப்படுவதாக இராணுவ அதிகாரி கூறினார். அத்துடன் 100 மில்லியன் ரூபா நிதியும் அதற்குத் தேவையாக உள்ளது என்றும், அதை விரைவாக விடுவிப்பதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம் கேப்பாபிலவில் 543 ஏக்கர் காணியை விடுவிக்கக்கூடிய நிலைமை உள்ளது. மிகுதி 70 ஏக்கர் காணி அவர்களது கட்டடங்கள், முகாம்கள் அமைந்துள்ள நந்திக் கடல் பகுதியாக உள்ளது. அதை விடுவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. அதில் இருந்து தாங்கள் வெளியேறுவதாக இருந்தால் 400 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறினர்.

அவர்களைப் பொறுத்தவரை அந்தக் காணியில் இருந்து விலகும் நோக்கம் இல்லை. ஆனால் மக்களின் காணியில் இருந்து நீங்கள் விலகவேண்டும் என்றே மக்கள் சொல்லுகிறார்கள். அந்தப் பகுதியில் பாடசாலைகள், கோயில்கள், மயானம் என்பன அமைந்துள்ளன. எனவே நீங்கள் அதனையும் விடுவிக்க வேண்டும் என்று நான் இராணுவ அதிகாரியிடம் கூறினேன்.

இது தொடர்பில் அரச தலைவருடனும், இராணுவத் தளபதியுடனும் கலந்துரையாடி நல்ல முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.