வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் அரசு! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து.

வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைகளை நாடாளுமன்றில் நேற்று  புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டுக் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அரசு விரைந்து தீர்வு காணவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில்களை வழங்குமாறு அரசை வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை  பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 429 வேலையற்ற பட்டதாரிகளும், கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளும் உள்ளனர். இந்த நாட்டில் காணப்படும்  ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு பட்டதாரிகளுக்கு நிரந்தர வேலைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதன் மூலமாக நாட்டின் அபிவிருத்திகளை முன்னெடுக்கவேண்டும்” – என்றார்.