உடனடியாக தீர்க்கக் கூடிய பிரச்சினைகளை இந்த அரசாங்கம் தீர்க்கவில்லை

உடனடியாக தீர்க்கக் கூடிய பிரச்சினைகளைக் கூட இந்த அரசாங்கம் தீர்க்காத நிலை தான் காணப்படுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வன்னியின் தற்போதைய நிலை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 9 வருடங்களை நோக்கி செல்கின்ற நிலையிலும் வன்னியில் மக்களினுடைய அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. தீர்க்கக் கூடிய பிரச்சினைகளைக் கூட இந்த அரசு தீர்க்காத ஒரு நிலை தான் காணப்படுகின்றது.

அந்த வகையில் பூர்வீகமாக மக்கள் வாழ்ந்த நிலங்கள் விடுவிக்கப்படாமை அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இதில் மக்கள் பூர்வீகமாக அந்த நிலங்களில் வாழ்ந்தார்கள் என்பதற்கான பல ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இருக்கின்றன.

கொக்கிளாய், வட்டுவாகல், கேப்பாப்புலவு, செம்மலை, அளம்பில், புதுக்குடியிருப்பு என முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமன்றி மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை.

மக்களிடம் காணிக்கான ஆவணங்கள் இருந்தும் அவை விடுவிக்கப்படாது இராணுவம், கடற்படை, விமானப்படை என்பன ஆக்கிரமித்து வைத்துள்ளன. இந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என கடந்த 8 வருடங்களாக மக்கள் காத்திருந்தார்கள்.

ஆனால் அவ்வாறு நடைபெறாமையால் தற்போது அந்தக் காணிகளை விடுவிப்பதற்காக மக்கள் சாத்வீக ரீதியாக வலிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். கேப்பாப்புலவு மக்கள் தங்களது காணிகளுக்கு முன்பக்கமாக கொட்டகைகள் அமைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக காணிகளை விடுவிக்குமாறு போராடி வருகிறார்கள்.

இதேபோன்று வன்னிக்கு வெளியே கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசானது மக்களினுடைய நிலத்தில் நிரந்தர இராணுவமுகாம்களை அமைத்து அதனை விடுவிக்க முடியாது என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.

இதனைவிட இந்த முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை மீன்பிடித் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது தொடர்பிலும் அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம்.

மத்திய மீன்பிடி அமைச்சர் முல்லைத்தீவுக்கு வந்த போது அரச அதிபர் தலைமையில் மீன்பிடிச் சங்கங்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடி மீன்பிடி அமைச்சருடன் கடற்கரைக்கு சென்று தென்பகுதி மீனவர்களின் வருகை, பொருத்தமற்ற மீன்பிடி முறைகளை பின்பற்றுவது தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தோம்.

இருப்பினும் அதனை அரசாங்கம் தடுக்காத நிலையில் மீனவர்களுக்கு அனுமதி கொடுப்பதும், படகுகளுக்கு அனுமதி கொடுப்பதும், மக்களுடைய இறங்கு துறைகள், பாடுகளை சிங்கள மீனவர்களுக்கு வழங்குவதும் என்ற நிலைமைகள் தான் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

வாழ்வாதார ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் தொடர்ந்தும் இந்த அரசாசாங்கம் ஒரு பாராமுகமாக அல்லது தமிழரை மூன்றாம் தரப்பாக கருதி செயற்பட்டு வருகின்றது என்று தான் நான் கருதுகின்றேன் சாந்தி சிறீஸ்கந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.