வடக்கு, கிழக்கின் பிரச்சினைகள்! சுவீடன் தூதுவருக்கு எடுத்துரைத்த சம்பந்தன்

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சுவீடன் தூதுவரிடம் எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவருக்கும் சுவீடன் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில், இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலைகளின் நிலவரங்கள் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் சுவீடன் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார் என அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாகவும், அது குறித்தான விளக்கத்தை சம்பந்தன் தூதுவரிடம் விளக்கியதாகவும் நம்பப்படுகிறது.

“தமிழர்கள் பொறுமை காக்கும் வரையில் பொறுமை காத்துவிட்டார்கள். இனியும் அவர்களால் பொறுத்திருக்க முடியாது. தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு வழங்கப்படவேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு மற்றும் நேபாளத்துக்கான சுவிஸின் தூதுவர் ஹரால்ட் சன்பேர்க், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார்.

இதன்போதே மேற்கண்டவாறு கூறினேன் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை முக்கியமானது. காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மீள்குடியமர்வு பூர்த்தியடையவில்லை.

அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இராணுவப் பிரசன்னம் குறையவில்லை. காணாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

தேசிய அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று 2 வருடங்கள் கடந்துவிட்டன. தமிழ் மக்கள் தங்களால் முடிந்தவரை பொறுமையாக இருந்துவிட்டார்கள்.

இனியும் அவர்களால் பொறுமையாக இருக்கமுடியாது. அவர்களின் பிரச்சினைகள் விரைந்து தீர்க்கப்படவேண்டும். சர்வதேச சமூகம் இதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று சுவிஸின் தூதுவரிடம் தெரிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.