இரண்டு மாதங்களுக்குள் மயிலிட்டியை விடுவிப்பதாக தேசிய அரசு உறுதி! – மாவை எம்.பி. தெரிவிப்பு

“வலிகாமம் வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டிப் பிரதேசம் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும் என்று தேசிய அரசு உறுதி வழங்கியுள்ளது.”
– இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மீள்குடியேற்றம் விடயம் குறித்துப் பேசப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-
“வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியைப் பாதுகாப்புத் தரப்பினர் நீண்டகாலமாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அந்தப் பிரதேசத்தை விடுவிக்குமாறு பல தடவைகள் தேசிய அரசிடம் வலியுறுத்தினோம். மயிலிட்டி பிரதேசத்தை இன்னும் 2 மாத காலப்பகுதிக்குள் விடுவித்து பொதுமக்களிடம் கையளிப்பதாக தேசிய அரசு உறுதி வழங்கிஇள்ளது.
அத்துடன், பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கம் தொடர்பில் 1986ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அடிப்படையாக வைத்து மேலதிகமாகக் காணிகளை சுவீகரிப்பதற்கு தற்போதைய தேசிய அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று நாம் தேசிய அரசிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளோம்.
1986ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற வேண்டும் என்று கடந்த கால மாவட்ட ஒருக்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது” – என்றார்.