காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் நிறுவப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்

ஊகங்களும், சந்தேகங்களும் நீதியையும் நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. அவற்றை விசாரணைகளின் ஊடாக நிரூபிக்க வேண்டும்.

அதற்குக் காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் நிறுவப்பட வேண்டும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ராஜபக்ச ஆட்சியில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கேட்ட போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் தொடர்பில் ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறுகின்றனர். சந்திரிக்கா அம்மையார் சொல்லும் ஊகம் சில வேளைகளில் சரியாக இருக்கலாம்.

எமது பலத்த சந்தேகமும் அதுவே. ஆனால், ஊகமும், சந்தேகமும் நீதியையும், நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. சரியான விசாரணை நடத்தப்படவேண்டும்.

இதற்குக் காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்படவேண்டும். அந்த அலுவலகம் நிறுவப்பட்டால் ஒவ்வொரு விடயமாக ஆராயப்படும்.

இந்த அலுவலகம் நிறுவப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.