குற்றம் சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்களின் கருத்துக்கள் பெறப்படவேண்டும் சிறீதரன் M.P

வடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். உரும்பிராயில் இன்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறீதரன் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினரிடம் வடமாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

வடமாகாண அமைச்சர்கள் இருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்ற போது அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

அதற்காக குறிப்பிட்ட அமைச்சர்கள் உடனடியாகப் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக மூவரடங்கிய குழுவினரை வடமாகாண முதலமைச்சர் நியமித்திருந்தார்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக ஊடகங்களில் தெரியப்படுத்துவதைத் தவிர்த்துக் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பான விடயங்களை முதலமைச்சர் வெளியிட்டிருந்தால் இந்த விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.