முயற்சிகளை எடுக்கிறோம்! மனத்திடத்தை இழக்காதீர்கள்!! – சி.வி.விக்னேஸ்வரன்

“எங்களாலான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகின்றோம். போராட்டத்திலுள்ள மக்கள் மனத்திடத்தை இழக்கவேண்டாம்.”
– இவ்வாறு தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
கேப்பாப்பிலவிலுள்ள 138 குடும்பங்களுக்குச் சொந்தமான 480 ஏக்கர் காணியை இராணுவத்தின் பிடியிலிருந்து மீட்டுத்தருமாறு கோரிக்கையை முன்வைத்து இன்று செவ்வாய்க்கிழமை 98ஆவது நாளாகவும் தொடர் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அந்த மக்களுக்கான செய்தியொன்றை நேற்று திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.
“எங்களாலான முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்துவருகின்றோம். போராட்டத்திலுள்ள மக்கள் மனத்திடத்தை இழக்கவேண்டாம். காணிகள் மீண்டும் தரப்படும் என்று  மீள்குடியேற்ற  அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் என்னிடம் உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் கவனத்துக்கும்  நான் இதனைக் கொண்டுசென்றுள்ளேன். இந்த விடயத்தில் முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதனை மறுத்துக்கொண்டிருப்பது இராணுவமே.
அத்துடன், உண்ணாவிரதத்தில் இருப்பதாலோ, மிகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபடுவதாலோ இராணுவம் உங்கள் மீது பரிவுறும் என நீங்களோ, நாங்களோ எதிர்பார்க்க முடியாது. கேப்பாப்பிலவு மக்களே நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள். பொருந்தாத செயல் எதனையும் செய்யவேண்டாம்.
உங்களுடைய போராட்டத்துக்கு  எங்களுடைய ஆதரவு எப்போதும் இருக்கும்” என்று  முதலமைச்சர் அனுப்பிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.