குற்றமிழைத்த படையினரை அரசாங்கம் பாதுகாக்கக் கூடாது-சம்பந்தன்

மனித நேயத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், போர் வீரர்கள் என்ற போர்வையில் மூடிமறைக்கப்படக்கூடாது. இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். ஜெனீவா பிரேரணை தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதை காலதாமதப் படுத்துவதோ அல்லது மறுப்பதோ நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும். பிரேரணையில் உள்ளடங்கிய விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதே நாட்டை முன்னோக்கி நகர்த்திச் செல்வதற்கான முதற்படியாக இருக்கும். யுத்த காலத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினர் முகங்கொடுத்த பிரச்சினைகளையும், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

யுத்த வீரர்கள் எனக் கூறப்படும் பாதுகாப்புத் தரப்பினர் சகலரும் மனித உரிமை மீறல்களிலோ அல்லது சர்வதேச சட்டங்களையோ மீறியதாகக் கூறவில்லை. எனினும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், ஐந்து மாணவர்களின் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களுடன் யுத்தவீரர்கள் எனக் கூறப்படுபவர்களே தொடர்புபட்டுள்ளார்கள். இவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் மறைத்து வைக்கப்படக் கூடாது.

அதேபோன்று 2008- –2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் மனித நேயத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், யுத்த வீரர்கள் என்ற போர்வையில் மறைத்து வைக்கப்படக்கூடாது. அரசியல் நோக்கங்களுக்காக அவ்வாறானவர்கள் மறைத்து வைக்கப்படக்கூடாது. சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். 2009ஆம் ஆண்டு அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கை வந்திருந்த போதும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமையவே இலங்கை தொடர்பான விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பமானது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 1988–1989 காலப் பகுதியில் ஏற்பட்ட ஆயுதப் புரட்சியில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜெனீவா சென்று முறைப்பாடு செய்திருந்தார். அவர் ஆயுததாரிகள் பற்றி எதுவும் முறைப்பாடு செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் பற்றியே முறைப்பாடு செய்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.