இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 17 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற 17 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று வருகைதந்திருந்தார்கள். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், தங்களுடைய உதவிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும் பல கேள்விகளை எழுப்பினார்கள்.
நிர்வாகம் சம்பந்தமாக: அரசியல், பொருளாதார ரீதியாக : நிதி விடயமாக : சமூகம் தொடர்பாக நாங்கள் எவ்வளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை அவர்கள் அக்கறையுடன் செவிமடுத்துக் கொண்டார்கள்.
முழுமையாக எங்களுக்கு உரித்துக்கள் தரப்படாமல், அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படாத நிலையிலே அல்லது புதிய அரசியல் யாப்பொன்று அறிமுகப்படுத்தப்படாத நிலையிலே நாங்கள் பழைய நிலைமையிலேயே தரித்து நிற்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று விளக்கினோம்.
எங்களுடைய விளக்கங்களைப் புரிந்து கொண்டார்கள் என்று நம்புவதாகவும், தாங்கள் எங்களுடன் கலந்துரையாடிய விடயங்களை அரசின் உரிய தரப்புகளுக்கு விளக்குவதாக உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டார்.