அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது!

மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் அதிகாரங்களைப் பகிர்வதன் ஊடாகவே இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போதான துரித செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தற்போது பின்பற்றப்படும் அரசாங்க முறைமையானது ஊழல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் வகையில் இருப்பதால் இம்முறையை மாற்றுவதற்கான காலம் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜே.வி.பி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் நிர்வாகம் முழுவதும் கொழும்பை மையப்படுத்தியதாகக் காணப்படுகிறது. இதனால் பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஊழல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உண்டு. அது மாத்திரமன்றி பொது மக்கள், சிவில் சமூகத்தினருடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாடல்களை ஏற்படுத்தி அதனூடாக நிவாரண செயற்பாடுகளையும் ஏனைய பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே வினைத்திறனான நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.

அரசாங்கத்தின் முறைமையானது ஒரே மாதிரியானதாகக் காணப்படுகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரே மாதிரியான அரசாங்க முறைமையே காணப்படுகிறது. இதனால் நாட்டில் எந்தவொரு பாரிய மாற்றங்களையும் காண முடியாதுள்ளது.

எனினும், ஏனைய உலக நாடுகள் மாறுபட்ட முறைமைகைளை கடைப்பிடித்து முன்னேறிச் சென்றுள்ளன. இயற்கை அனர்த்தம் மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் போன்ற அண்மைக்கால சம்பவங்களை எடுத்துப்பார்த்தால் நிர்வாக அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியதன் அவசியம் நன்கு புலனாகிறது. அரசாங்க முறைமையில் வெளிப்படைத்தன்மை தேவை என்பது இதனூடாகத் தெரிகிறது.

தற்பொழுதுள்ள அரசாங்க முறைமையானது ஜனநாயக உரிமைகளை மதிப்பதாக இல்லை. அதாவது மக்கள் மதிக்கப்படவில்லையென்பதே இதன் அர்த்தமாகும். மக்கள் தம்மை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் பங்கு கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனை அடைவதாயின் பிராந்திய மற்றும் மாகாண ரீதியில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என்றார்.