அறிக்கை விவகாரம் முடியும் வரையில் தனது பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக த.குருகுலராஜா அறிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி விசாரணை அறிக்கை விவகாரம் முடியும் வரையில்  தனது பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா  இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அறிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்  அமைச்சர் த.குருகுலராஜா கையெழுத்திடவில்லை என்பதால், இதனைக் கவனத்திலெடுக்கத் தேவையில்லை என்று கட்சித் தலைமை கூறியுள்ளது எனத் தெரியவருகின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், இந்த அறிக்கை மீதான விவகாரம் முடியும் வரையில் தனது பதவியிலிருந்து விலகியிருக்க விரும்புவதாகத் தெரிவித்து கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பியிடம் இந்தக் கடிதம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறியவர்கள், இந்தக் கடிதத்தை ஒப்படைத்துச் சென்றுள்ளனர். கடிதத்தில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா கையெழுத்திடவில்லை.
இதனால் இந்தக் கடிதம் தொடர்பில் மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை.சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.