வடக்கை வதைக்கிறது வறட்சி – அவசர நடவடிக்கைகளுக்கு சபையில் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து.

“வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி தொடர்பில் விசேட கவனம் செலுத்தி மக்களுக்கு அரசு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும்”  என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை  அனர்த்தம் தொடர்பில் ஜே.வி.பியால் நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்தக் கோரிக்கையைக் விடுத்தார்.
மாகாணம் மற்றும் மாவட்டங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் ஊடாக இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களின்போது உரியவகையில் பொறிமுறையை முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மத்திய அரசின் நிர்வாகப் பொறிமுறையானது கொழும்பை மையப்படுத்தி காணப்படுவதால் பிரதேச மட்டங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. எனவே, இந்நிலைமை மாறி வினைத்திறனான நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.
உலகம் முன்னேறியுள்ளது.தொழில்நுட்பம் வளர்ச்சிகண்டுள்ளது. ஆனால், இலங்கை இன்னும் முன்நோக்கி நகரவில்லை. எனவே, மாற்றத்தை நோக்கி நகரவேண்டும் என்பதையே அண்மைக்கால அனர்த்தங்கள் எடுத்துரைத்துள்ளன.
அரச முறைமையானது ஜனநாயக உரிமைகளை மதிப்பதாக இல்லை. அதாவது, மக்கள் மதிக்கப்படவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். மக்கள் தம்மைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் பங்குகொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும். இதனை அடைவதாயின் பிராந்திய மற்றும் மாகாண ரீதியில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதிகாரங்களை மத்தியில் வைத்துக்கொண்டு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது.
வடக்கு, கிழக்கில் கடும் வறட்சி நிலவுகின்றது. இது பற்றி அரசு கவனம் செலுத்தி, மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கவேண்டும். இதுவிடயத்தில் அரசு கரிசனை கொண்டுள்ளது என நம்புகின்றோம்” – என்றார்.